சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டதே தவிர உடன்படிக்கை கைச்சாத்திடப்படவில்லை

106 0

சர்வதேச நாணய நிதியத்திற்கும் அரசாங்கத்திற்குமிடையில் இடம்பெற்ற பேச்சு வார்த்தையில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதே தவிர உடன்படிக்கை கைச்சாத்திடப்படவில்லை என சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் 8 ஆம் திகதி வியாழக்கிழமை அனுரகுமார திசநாயக்க நிலையியற் கட்டளை 27/2ன் கீழ் எழுப்பிய கேள்வியின் போது சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை தொடர்பில் பாராளுமன்றத்திற்கு வெளிப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

அதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இவ்வாறு தெரிவித்தார்.

அனுரகுமார திசாநாயக்கவின் இந்த கேள்வியையடுத்து சபையில் அது தொடர்பில் வாத விவாதங்கள் ஏற்பட்டதுடன், முன்னாள் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரும் அது தொடர்பில் கருத்துக்களை தெரிவித்தனர்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் அது தொடர்பில்  மேலும் தெரிவிக்கையில்,

நிதியமைச்சின் அதிகாரிகளுக்கும் சர்வதேச நாணய நிதிய ஊழியர் மட்ட அதிகாரிகளுக்குமிடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. எனினும் உடன்படிக்கை கைச்சாத்திடப்படவில்லை.

இந்த இணக்கப்பாடு நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு ஒரு பதிலாக அமைகின்றது. நான்கு வருடங்களுக்கான கடன் தொடர்பிலேயே இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது. அந்த கடன் கிடைக்கும் என்ற நம்பிக்கை உறுதியாகியுள்ளது.

 

இதற்கு முன்னரும்  சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அனுமதி கிடைத்த பின்னரே பாராளுமன்றத்திலும் அமைச்சரவையிலும் அது சமர்ப்பிக்கப்பட்டது. அத்தகைய சம்பிரதாயமே தொடர்கிறது.

அரசாங்கத்தின் வரி வருமானம் நூற்றுக்கு எட்டு வீதமாக குறைவடைந்துள்ளது. பொருளாதார நெருக்கடி நிலை அதிகரித்துள்ள நிலையில் இந்த நிலையிலிருந்து நாம் மீள வேண்டுமானால்   சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல வேண்டும் என்பது உறுதியாகியுள்ளது.

அதேவேளை தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள நான்கு மாதத்திற்கான இடைக்கால  வரவு செலவுத் திட்டம் கொள்கை ரீதியிலான வரவு செலவுத் திட்டம் அல்ல. நான்கு மாதங்களுக்கு அரசாங்கத்திற்கான வருமானத்தை பெற்றுக் கொள்வதற்காகவே அது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் வரவு செலவு திட்டம்  கொள்கையுடனான விரிவான வரவு செலவுத் திட்டமாக அமையும் என்றார்.