மக்களுக்கு நிவாரணங்களை வழங்கியதாலேயே அரச நிறுவனங்கள் வங்குரோத்தாகின

145 0

மக்களுக்கு நிவாரணங்களையும் மானியங்களையும் வழங்கியதாலேயே முக்கியமான அரச நிறுவனங்களும் திறைசேரியும் வங்குரோத்து நிலை அடைவதற்கு காரணமாகும்.

அத்துடன் நாட்டில் 21 மில்லியன் மக்கள் வாழ்கின்ற போதும் 4 வீதமானவர்களே அரசாங்கத்திற்கு வரி செலுத்துகின்றனர். அதிலும் இரண்டு வீதமானவர்களே நேரடி வரியை செலுத்துகின்றனர் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் 08 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற சமூக பாதுகாப்பு உதவுத் தொகை அறவீட்டுச் சட்டமூலம் மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே  இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பாராளுமன்றத்தில் தொழிலாளர் பிணக்குகள் தொடர்பான சட்ட மூலம் உட்பட தொழில் அமைச்சின் மூன்று திருத்த சட்டமூலங்கள்  வாக்களிப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றேன்.

கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக உலகளாவிய பல்வேறு நாடுகள் வீழ்ச்சி நிலையை அடைந்த போதும் சமூக பாதுகாப்பு வரிச் சட்டம் நடைமுறைப்படுத்தல் மூலமே அத்தகைய நாடுகளின் வீழ்ச்சி தவிர்க்கப்பட்டது.

அதனால் தான் இலங்கையிலும் சமூக பாதுகாப்பு வரி சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.

அமெரிக்கா போன்ற நாடுகளில் வருமானத்திற்கு ஏற்ப வரி அறவிடப் படுகின்றது. எனினும் எமது நாட்டில் அதிக வருமானம் பெறுபவர்களுக்கும் ஏனையவர்களுக்கும் ஒரே விதமாகவே, ஒரு வரி மட்டுமே அறவிடப்படுகிறது.

இந்த நிலை மாற்றமடைய வேண்டும். நடைமுறை வரி முரண்பாட்டை நிவர்த்தி செய்து வரிமுறைமையில் மாற்றம் ஏற்படுத்துவது அவசியம். எதிர்க்கட்சி எத்தகைய எதிர்ப்பினை தெரிவித்தாலும் அரசாங்கம் அதனை செய்தே தீரும்

அத்துடன் மக்களுக்கு நிவாரணங்களையும் மானியங்களையும் வழங்கியதாலேயே முக்கியமான அரச நிறுவனங்களும் திறைசேரியும் வங்குரோத்து நிலை அடைவதற்கு காரணமாகும்.  அவ்வாறு மானியம் வழங்கியதாலேயே பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 10 பில்லியன் கடனாளியாகவும் அதற்கு வட்டி செலுத்த வேண்டியும் ஏற்பட்டுள்ளது.

மேலும் நாட்டுப்பற்று தொடர்பில் கடந்த காலங்களில் பேசப்பட்ட போதும் நாட்டை அடகு வைக்கும் நடவடிக்கைகளே இடம் பெற்றுள்ளன.

அந்த வகையில் வரி அறவீட்டு முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் போது சர்வதேச நாணய நிதியத்திற்கு ஏற்ப அரசாங்கம் செயற்படுகிறது என எதிர்க்கட்சி குற்றம் சாட்டலாம்.

அவ்வாறு எத்தகைய குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள  நேர்ந்தாலும் அரசாங்கம் அதனை செய்தே தீரும்  என்றார்.