ஐ. நா. விசேட அறிக்கையாளர் இலங்கை குறித்து கவலை

158 0

தற்போதைய நெருக்கடிநிலைக்கு மத்தியில் இலங்கை அரசாங்கம் மனித உரிமைகளை அடிப்படையாகக்கொண்ட அணுகுமுறையொன்றைப் பின்பற்றுவதன் மூலமே நாட்டைப் பாதுகாக்கமுடியும்.

இருப்பினும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதைப்போன்று தெரியவில்லை என்று சுட்டிக்காட்டியிருக்கும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளர் மேரி லோலர், இதுவரையான காலப்பகுதியில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைத் திருத்தியமைப்பதற்கு மிகச்சொற்பளவிலான நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் கவலை வெளியிட்டுள்ளார்.

மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டியதன் அவசியம் குறித்தும், தமது செயற்பாடுகளை சுதந்திரமாக முன்னெடுப்பதற்கான இடைவெளி அவர்களுக்கு வழங்கப்படவேண்டும் என்றும் தொடர்ச்சியாக வலியுறுத்திவரும் மேரி லோலர், நாட்டிலுள்ள மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களின் தற்போதைய நிலை குறித்து வெளியிட்டுள்ள கட்டுரையொன்றிலேயே மேற்கண்டவாறு கவலை வெளியிட்டுள்ளார்.

அக்கட்டுரையில் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ள விடயங்கள் வருமாறு,

நெருக்கடி நிலையொன்றின்போது மனித உரிமைகளை அடிப்படையாகக்கொண்ட அணுகுமுறையைப் பின்பற்றுவதன் மூலமே நாட்டைப் பாதுகாக்கமுடியும். மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் சமத்துவம், தொழிலாளர் உரிமைகள், சிறுபான்மையின மற்றும் பின்தங்கிய சமூகப்பிரிவினரின் உரிமைகள், பெண்களின் உரிமைகள் தொடர்பிலும் மற்றும் கடந்தகால மீறல்கள் குறித்து உண்மை, நீதி மற்றும் இழப்பீட்டைக்கோரி போராடுவோருடனும் இணைந்து பணியாற்றிய மிகவும் ஆழமான அனுபவத்தைக் கொண்டிருப்பர்.

இருப்பினும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதைப்போன்று தெரியவில்லை. நான் அண்மைய சில வாரங்களில் நாட்டிலுள்ள மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுடன் சந்திப்புக்களை நிகழ்த்தியிருப்பதுடன் அவர்கள் இலக்குவைக்கப்படும் பல்வேறு சம்பவங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தியுள்ளேன்.

அதேபோன்று கடந்த காலங்களில் மனித உரிமைகள்சார் கரிசனைகள் குறித்து இலங்கை அதிகாரிகளிடம் பேசிய வேளையில், இலங்கை ஓர் இருண்ட பக்கத்தை நோக்கித் திரும்பியிருப்பதைப்போல் தோன்றுகின்றது.

பாதுகாப்புப்படையினரைப் பயன்படுத்தல், அடக்குமுறைகள், தடுத்துவைப்புக்கள் ஆகியவற்றின் ஊடாக ஆர்ப்பாட்டங்களை முடக்கும் வகையில் இலங்கை அரசாங்கத்தினால் அவசரகால அதிகாரங்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதாக மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் என்னிடம் நேரடியாகவே கூறினர். அதுமாத்திரமன்றி ஊடகவியலாளர்கள் பாதுகாப்புப்படையினரால் கடத்தப்பட்டு, சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவது குறித்தும் அவர்கள் எடுத்துரைத்தனர்.

மேலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தன்னிச்சையாகத் தடுத்துவைக்கப்பட்டிருப்பது குறித்தும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் வீடுகள் சோதனையிடப்பட்டிருப்பது குறித்தும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களின் குடும்பத்தினர் மீதான அடக்குமுறைகள் குறித்தும் நான் கேள்வியுற்றேன்.

அதேவேளை அண்மைக்காலத்தில் நாட்டிலுள்ள விமர்சனக்குரல்களுக்கு எதிராக பயங்கரவாத்தடைச்சட்டமானது முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்படுகின்றமையை அவதானிக்கமுடிகின்றது. இதனையொத்த உத்திகள் உலகம் முழுதும் கையாளப்படுகின்றன.

நான் விசேட அறிக்கையாளராகப் பதவியேற்றதிலிருந்து மிகவும் விரிவான வரைவிலக்கணத்தைக்கொண்ட பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குவதற்கும் அதனைப் பதிலீடு செய்வதற்குமான பரிந்துரைகளை ஐக்கிய நாடுகள் சபையின் ஏனைய விசேட நிபுணர்களுடன் இணைந்து முன்வைத்திருந்தேன்.

இருப்பினும் இந்தச் சட்டத்தைத் திருத்துவதற்கு மிகச்சொற்பளவிலான நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.