வடக்கு கிழக்கு தமிழர்கள் மீது கடற்படையினர் தாக்குதல்: கூட்டமைப்பு கடும் விசனம்

116 0

வடக்கு, கிழக்கில் கடற்படையினருக்கு ‘வெறி’ வந்தால், அவர்கள் ‘மதுபோதை’யில் நின்றால் அவர்களின் ‘வைட்ஸ்’ ஆக தமிழர்கள் பயன்படுத்தப்படுகின்றார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் கடற்றொழிலாளர் இராசரத்தினம் நிமால் என்பவர் இலங்கை கடற்படையினரால் அண்மையில் தாக்கப்பட்டமை தொடர்பில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

“வடக்கு மாகாணத்தின் இன்றைய நிலைமை மிக மோசம். கிழக்கு மாகாணத்தின் நிலைமையும் மோசம்.கிளிநொச்சியிலுள்ள வலைப்பாடு என்ற கிராமத்தில் கடல் தொழில்தான் பிரதானமான தொழில்.

அந்தத் தொழிலுக்குச் சென்ற இராசரத்தினம் நிமால் என்ற 44 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தை கடந்த 4 ஆம் திகதி வலைப்பாட்டைச் சேர்ந்த கடற்படையினரால் மிக மோசமாகத் தாக்கப்பட்டு சுயநினைவற்ற நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டு சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
கடற்படை இவரைத் தாக்கியதற்கான காரணம் என்ன? ஆயுதம் வைத்திருந்தாரா? குண்டுகள் வைத்திருந்தாரா? நாட்டுக்கு எதிராகச் செயற்பட்டாரா?

கடற்படையினருக்கு ‘வெறி’ வந்தால், அவர்கள் ‘மதுபோதை’யில் நின்றால் அவர்களின் ‘வைட்ஸ்’ ஆக தமிழர்களை பயன்படுத்தப்படுகின்றார்கள்.

தமிழர்கள் கொல்லப்படுகின்றார்கள். மிக மோசமாகத் தாக்கப்படுகின்றார்கள். இது மிக மோசமான நிலைமை. இதனை அரசாங்கம் புரிந்துகொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்றார்.