தேசிய போசணைக்கொள்கை அமைக்கப்படவேண்டும்!

227 0

சிறுவர்கள் மற்றும் தாய்மாரின் மந்தபோசணை கட்டுப்படுத்த தேசிய போசணை கொள்கை அமைக்கப்படவேண்டும். அதற்காக பூரண ஆதரவை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (7) இடம்பெற்ற பிள்ளைகள் தாய்மாரின் மந்தபோசணை தொடர்பாக யுனிசெப் நிறுவனம் விடுத்திருக்கும் அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு வேளை இரண்டாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு  உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மிகவும் கஷ்டமான காலகட்டத்திலேயே நாங்கள் இருக்கின்றோம். யுனிசெப் அறிக்கைக்கு அமைய மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டிய 57 இலட்சம் பேர் இருக்கின்றனர். அவர்களில் 23 இலட்சம் பேர் சிறுவர்களாகும்.

நாட்டில் பயிர் அறுவடை 40 -50 வீதத்தால் குறைவடைந்துள்ளது. அதனால்  இந்த நேரத்தில் கட்சி பேதங்கள் இன்றி தாய், சேய் சுகாதாரம் தொடர்பில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும்.

தற்போதைய நிலைமையில் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இதற்கான நாட்டுக்கு ஒன்றிணைந்த போசணை வேலைத்திட்டம் அவசியமாகும்.

சிறுவர்கள், கர்ப்பிணி தாய்மார், பாடசாலை மாணவர்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களை உள்ளடக்கிய போசணை கொள்கை அமைக்கவேண்டும். இதற்கு நாங்கள் பூரண ஒத்துழைப்பை வழங்குவோம்.

அத்துடன் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையில் பண வீக்கம் உயர்வடைந்துள்ளது. வாழ்வாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.

போசணையுள்ள உணவுகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இது போசணைக் குறைப்பாட்டை அதிகரிக்கின்றது.

பொருளாதார வீழ்ச்சிக்குள் வளங்கள் மற்றும் பணம் என்பன வரையறுக்கப்பட்டதாகவே உள்ளன. ஆனால் அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் போது, குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் விசேட அவதானங்களை செலுத்த வேண்டும்.

20 ஆயிரம் ரூபா பெறுமதியான போசணை பொதியுடன் மேலும் 2,500 ரூபாவை இணைப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார். அதனை நாங்கள் வரவேற்கின்றோம். ஆனால் கோத்தாபய ராஜபக்ஷ் காலத்தில் 20 ஆயிரம் ரூபா போசணை பொதி விநியோகம் நிறுத்தப்பட்டது.

வேறு அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதற்காகவா நிறுத்தினீர்கள் என கேட்கின்றோம். அதனால் 2,500ரூபா மேலதிகமாக வழங்குவதற்கு முன்னர் கர்ப்பிணி தாய்மாருக்காக வழங்கப்பட்டுவந்த 20ஆயிரம் ரூபா பெறுமதியான போசணைப் பொதியை தொடர்ந்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பிள்ளைகள் மற்றும் தாய்மாரின் பாரதூரமான மந்த போசணை நிலைமையிலும் அமைச்சரவை ஆசனங்களுக்கான போட்டிகள் நடக்கின்றன. அமைச்சுப்பதவிகளுக்காக போட்டியிடும் நேரமா இது?. பலம்மிக்க அமைச்சரவை அமைத்தாலும் சிறந்த தரவுகள் இல்லாமல் நாடு என்றவகையில் எமக்கு முன்னுக்கு செல்ல முடியாது என்பதை அரசாங்கம் உணர்ந்துகொள்ளவேண்டும். இருந்தபோதும்  நல்ல வேலைத்திட்டங்கள் இருந்தால் நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்து ஆதவளிப்போம் என்றார்.