உரம் கொண்டுவருவதற்காக சீன நிறுவனத்துக்கு 6.7 மில்லியன் டொலர் நிதி வழங்கப்பட்டுள்ளது. அந்த நிதியை மீள பெற்றுக்கொள்ள பல முயற்சிகளை மேற்கொண்டபோதும் அது கைகூடவில்லை என கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 06 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சி உறுப்பினர் சமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்விக்கு பதில ளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்:
சீன உரக்கப்பல் விவகாரம் தொடர்பில் நாம் அமைச்சரவைக்குப் பத்திரம் சமர்ப்பித்துள்ளோம். மேற்படி உர விவகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சீன நிறுவனத்திற்கு 6.7 மில்லியன் டொலர் நிதி வழங்கப்பட்டுள்ளது.
அந்த நிதியை மீள பெற்றுக் கொள்வதற்கு நாம் முயற்சிகளை மேற்கொண்டோம் எனினும் அது கைகூடவில்லை. அதேபோன்று அந்த உரத்திற்கு பதிலாக. இரசாயன உரத்தை பெற்றுக் கொள்வதற்கு முயற்சித்தோம் அதுவும் கைகூடவில்லை.
அதேவேளை, சேதன பசளை தொடர்பில் எம்மிடம் இன்னும் முறையான தர நிர்ணயம் செய்யக்கூடிய நிலை கிடையாது. எவ்வாறெனினும் மேற்படி விவகாரத்தை நாம் கைவிடவில்லை. அது தொடர்பில் ராஜதந்திர ரீதியில் முன்னெடுப்புகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சீன உரக்கப்பல் விவகாரம் தொடர்பில் இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகள் பாதிக்கப்படாத வகையில் ராஜதந்திர ரீதியில் கையாளப்படவுள்ளது. எமது வெளிவிவகார அமைச்சு சீனத்தூதுவருடன் கலந்துரையாடி அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றார்.
இதன் போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவிக்கையில்,
சீன உரக்கப்பல் விவகாரம் மட்டுமின்றி நெனோ உரம் தொடர்பில் இடம்பெற்றுள்ள மோசடிகள் தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த உதவி விவகாரங்கள் தொடர்பில் ஆவணங்களில் கையொப்பமிட்டுள்ள அதிகாரிகள் மட்டுமின்றி அதற்கான மூல காரணமான முன்னாள் ஜனாதிபதி, சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் ஆகியோரும் பொறுப்புக் கூற வேண்டும். அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் மஹிந்த அமரவீர கணக்காய்வாளர் நாயகம் மற்றும் பாராளுமன்றம் மேற்கொள்ளும் தீர்மானங்களுக்கு அமைய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

