வசந்த முதலிகே, சிறிதம்ம தேரர், ஹஷாந்தவை விடுவிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

218 0

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே,  கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் ஹாஷாந்த ஜீவந்த குணத்திலக்க  ஆகிய  மூவரும்,  சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பொறுப்பில் உள்ள தங்காலை, தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் அவர்களின் விடுதலையை வலியுறுத்தி பாரிய போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயங்கர்வாத  தடுப்பு  மற்றும் விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன அல்விஸ், இது தொடர்பில் எழுத்து மூலம் உறுதிப் படுத்தியுள்ளார்.

அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியம் இந்த ஆர்ப்பாட்டத்துக்கான ஏர்பாடுகளை முன்னெடுத்துள்ளதுடன் எதிர்வரும் 8 ஆம் திகதி வியாழனன்று இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

நாட்டில் ஜனாதிபதி பதவி மாற்றத்தை ஏற்படுத்திய மக்கள் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளர்களாக விளங்கிய அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே,  கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் ஹாஷாந்த ஜீவந்த குணத்திலக்க  ஆகிய மூவரையும்  பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கஅனுமதி  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் வழங்கப்பட்டது.

அதன்படி, அரசுக்கு எதிரான சதிகள் ஏதும் இடம்பெற்றுள்ளதா என  சி.ஐ.டி.  எனும் குற்றப் புலனாய்வுத் திணக்களம் மற்றும் சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கர்வாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு ஆகியவற்றுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் இணைந்த பொலிஸ் சிறப்புக் குழுவொன்று விசாரணைகளை முன்னெடுக்கிறது.

இந்த விசாரணையும், கைது மற்றும் தடுப்புக் காவலும் அடக்குமுறையின் உச்ச கட்டம் என ஆர்ப்பாட்டக்காரர்கள்  சார்பில் தெரிவிக்கப்படுகின்றது. இந் நிலையில் கைது மற்றும் தடுப்புக் காவலுக்கு எதிராக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறான பின்னணியிலேயே, குறித்த மூவரையும் விடுவிக்க வலியுறுத்தி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று திட்டமிடப்பட்டுள்ளது.