ஜெனீவா கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு முன் பயங்கரவாதத் தடைச்சத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்

211 0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கடந்த வருடம் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் , இம்முறை மேலும் பல விடயங்கள் உள்ளடக்கப்படவுள்ளன.

குறிப்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான அடக்கு முறைகள் தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்தப்படவுள்ளது. எனவே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல வலியுறுத்தினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் , இம்முறை மேலும் பல யோசனைகள் உள்ளடக்கப்படவுள்ளன.

குறிப்பாக அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பிரயோகிக்கப்படும் அடக்குமுறைகள் தொடர்பானதாகவே அந்த யோசனைகள் அமையும். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அடக்குமுறைகளைப் பிரயோகிப்பது சர்வதேச சட்டத்திற்கு முரணானதாகும்.

எனவே அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் உட்பட பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு முன்னர் விடுதலை செய்யுமாறு வலியுறுத்துகின்றோம்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் பல சந்தர்ப்பங்களில் இலங்கையில் மனித உரிமைகளையும் , ஜனநாயகத்தையும் நிலைநிறுத்துவதாக உறுதியளித்திருக்கின்றார். ஆனால் ஒருபோதும் அதனை நிறைவேற்றியதில்லை.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வழமையாகவே மனித உரிமைகள் குறித்து மாத்திரமே அவதானம் செலுத்தப்படும்.

ஆனால் இம்முறை அதற்கு அப்பால் இலங்கையின் பொருளாதாரம் இந்தளவிற்கு சீர்குலைக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படவுள்ளது. இதற்கு முன்னர் ஐ.நா.வில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இவ்வாறு பொருளாதாரம் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவில்லை.

நாம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆட்சியை ஒப்படைக்கும் போது 7 பில்லியன் டொலர் அந்நிய செலாவணி இருப்பு காணப்பட்டது. ஆனால் இன்று டொலர்கள் மாத்திரமின்றி ரூபாயும் பூச்சி நிலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் எட்டப்பட்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட இணக்கப்பாட்டினை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு வலியுறுத்துகின்றோம் என்றார்.