ஜெனிவா விடயத்தில் தேவை ஒருங்கிணைந்த அணுகுமுறையே

139 0

ஜெனிவா திருவிழா செப்டெம்பர் 12ஆம் திகதி ஆரம்பமாகி ஒக்டோபர் மாதம் 07ஆம் திகதி வரை நடைபெற இருக்கிறது. திருவிழா தொடங்கும் ஆரம்ப நாட்களான 12ஆம், 13ஆம் திகதிகளில் இலங்கை தொடர்பான விவாதம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

2021 பெப்ரவரி – மார்ச் மாதங்களில் நடந்த 46ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட 46.1 தீர்மானத்தின் கால வரம்பு இந்தக்கூட்டத்தொடரில் முடிவடைய இருப்பதனாலும், பயங்கரவாதத்தடைச்சட்டம் நடைமுறைப்படுத்தல்,  ஜனநாயகப் போராட்டங்கள் அடக்கப்படுதல் என்பவற்றினாலும் இலங்கை விவகாரத்தில் ஜெனிவா சற்றுசூடாக இருக்கும் எனவும் கருதப்படுகின்றது.

இந்தக்கூட்டத் தொடரில் இரண்டு விடயங்கள் மிகுந்த கவனிப்பிற்குரியதாகவிருக்கும். ஒன்று ஐ.நா.மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகரின் அறிக்கை. இரண்டாவது பிரிட்டன் கொண்டு வரவிருக்கும் புதிய பிரேரணை. இந்த இரண்டு விடயங்கள் தொடர்பாகவும் தமிழ்த்தரப்பு மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டிய தேவை இருக்கின்றது. இதில் மிகுந்த பொறுப்பு உண்டு என்பதை தமிழ்த்தரப்பு புரிந்து கொள்ள வேண்டும்.

அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்தின் ஆதிக்கம் தான் ஜெனிவாவில் உள்ளது. அதன் உலகளாவிய நலன்களே ஜெனிவாவின் தீர்மானங்களாக மாறி விடுகின்றது. இந்தியா இலங்கையின் அயல்நாடாக, பிராந்திய வல்லரசாக இருப்பதனாலும் , இந்தோ-பசுபிக் மூலோபாயத்திட்டம் மேற்குலகத்தினதும் இந்தியாவினதும் கூட்டுத்திட்டமாக இருப்பதனாலும் இந்தியாவின் சம்மதத்தத்துடனேயே இலங்கை தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்படும்.

இதுவரை கால வரலாற்று அனுபவமும் அதனையே வெளிப்படுத்துகின்றது. சுருக்கமாகக் கூறின் இலங்கை தொடர்பாக இந்தியா – அமெரிக்கா கூட்டு நலன்களே ஜெனிவாவின் இலங்கை தொடர்பான தீர்மானங்களாக இருக்கும். இன்னோர் வகையில் கூறுவதாயின் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்தினது பூகோள நலன்களினதும் , பிராந்திய வல்லரசான இந்தியாவினது புவிசார் அரசியல் நலன்களினதும் கூட்டுநலன்களே இலங்கை தொடர்பான தீர்மானங்களாக இருக்கும்.

இரண்டு தரப்புக்கும் இலங்கை தொடர்பாக உள்ள பொதுவான இலக்கு சீனாவின் ஆதிக்கத்தை இலங்கையில் இல்லாமல் செய்வது தான் அல்லது இயன்றவரை கீழிறக்குவது தான். எனவே சீனாவின் ஆதிக்கம் கீழிறங்கும் வரை ஜெனிவா கோவையை இவை மூடப்போவதில்லை.

மறுபக்கத்தில் சீனாவின் நலன்களுக்கும், பெருந்தேசியவாத நலன்களுக்குமிடையே உடன்பாடு இருப்பதனால் பெருந்தேசியவாதத்தை உசுப்பேத்தக்கூடிய வகையில் தமிழ்த்தரப்பு ஆதரவு நிலையையும் எடுக்கப்போவதில்லை. ஆனால் ஜெனிவாவை சூடாக வைத்திருப்பதற்கு தமிழ்த்தரப்பும் தேவையாக இருப்பதனால் தமிழ்த்தரப்பை முழுமையாக கைவிடவும் போவதில்லை.

தமிழ் மக்கள் தொடர்பாக மேற்குலகத்தின் மூலோபாயம் தமிழ்த்தேசியம் நீக்கம் செய்யப்பட்ட தரப்பாக அதனை மாற்றி சிங்கள லிபரல் தரப்புடன் அதனைக்கலக்கச்செய்வதே. இதற்கேற்ற வகையில் தமிழ் மக்களின் இறைமைப்பிரச்சினையை மனித உரிமை விவகாரமாக மடைமாற்றி சிங்கள தேசத்தின் மனித உரிமை விவகாரங்களுடன் இணைந்து முழு இலங்கைத்தீவின் மனித உரிமை விவகாரங்களாக கையாள்வதே. தமிழ் மக்கள் மட்டும் இலங்கை அரச அதிகாரக்கூட்டமைப்புக்கு வெளியே இருப்பதனால் மேற்குலக நிகழ்ச்சி நிரலை இலங்கையில் முழுமையாக நகர்த்த அதனால் முடியவில்லை என்பது மேற்குலகத்திற்கு எப்போதும் உறுத்தலாக உள்ளது.

இந்தப்பின்னணியிலேயே மேற்குலக – இந்திய கூட்டின் நகர்வுகள் ஜெனிவாவைப் பொறுத்தவரை இருப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. ரணில் அரசாங்கம் என்பது மேற்குலகின் உற்பத்தி. எனவே இந்தத்தடவை ரணில் அரசாங்கத்தை பாதுகாக்கவே மேற்குலகம் முற்படும். அதற்குள்ள ஒரேயொரு உறுத்தல் ராஜபக்ஷக்களின் கைதியாக ரணில் இருப்பதே.

இக்கைதி நிலையைத்தவிர்ப்பதற்காக சர்வகட்சி அரசாங்கம் என்ற முகமூடியை அணிய முற்பட்ட போதும் அது பெரிய வெற்றியைக் கொடுக்கவில்லை. இதனால் ராஜபக்ஷக்களை பணிய வைப்பதற்கான முயற்சிகள் ஜெனிவாவில் இடம் பெறலாம். முன்னாள் ஜனாதிபதி கோட்டாவுக்கு உலக நாடுகள் அடைக்கலம் கொடுக்காமைக்கு இந்தப்பணிய வைத்தலும் ஒரு காரணமாக இருக்கலாம்.

மேற்குலகத்தின் இந்த நகர்வுகள் ராஜபக்ஷக்களுக்கும் நன்றாகவே தெரியும். பிரபாகரனுக்கு வன்னி மட்டும் பாதுகாப்பாக இருந்தது போல ராஜபக்ஷக்களுக்கும் இலங்கை மட்டும் தான் பாதுகாப்பாக இருக்கும். இதனை நன்கு புரிந்து கொண்டமையால் தான் நெருக்கடி வந்தபோது மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலை படைத்தளத்திற்குள் பதுங்கினாரே தவிர இலங்கையை விட்டு வெளியே செல்லவில்லை.

அதேவேளை இலங்கையில் ராஜபக்ஷக்களுக்கு பாதுகாப்பு கவசங்களாக இருப்பவை பெருந்தேசியவாதமும், சீனாவும் தான். அவற்றுடன் இணைந்து தமது இருப்பைப்பலப்படுத்துவதற்கு அவர்கள் எப்போதும் முயற்சிகளைச் செய்து கொண்டே இருப்பர். பெருந்தேசியவாதத்திற்கும் சீனாவுக்கும் கூட ராஜபக்சாக்களைத் தவிர வேறு தெரிவு இல்லை. சீனத்தூதுவரின் பௌத்தமத பீடங்களை நோக்கிய பயணமும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய உலகில் அலைந்து திரிதல் பற்றிய பௌத்தமத பீடாதிபதிகளின் கவலையும் இதனையே வெளிப்படுத்துகின்றன.

ஜெனிவா தொடர்பாக ரணில் அரசாங்கத்தின் நகர்வுகள் நல்லாட்சிக்கால நகர்வுகளை ஒத்ததாகவே இருக்கும். பூகோள அரசியல், புவிசார் அரசியலைப் பொறுத்தவரை இலங்கை எப்போதும் சமாளித்துப் போகும் வெளிநாட்டுக்கொள்கையையே பின்பற்றுகின்றது. இதுதான் பொதுவான அணுகுமுறை.

பச்சை அணி அரசாங்கத்திற்கும் நீல அணி அரசாங்கத்திற்குமிடையே இது விடயத்தில் அளவு வேறுபாடுகள்  மட்டும் இருக்கும். இவ்வாறான நகர்வில் அவை பின்பற்றும் தந்திரோபாயம் நெருக்கடி வரும் போது மேற்குலகினதும், இந்தியாவினதும் விருப்பங்களுகளுக்கு “ஆம்”  எனத்தலையாட்டுவது பின்னர் உள்நாட்டு அரசியலை சாட்டாகக்காட்டி அவற்றை நடைமுறைப்படுத்தாமல் விடுவது தொடருகிறது. இலங்கை இந்திய ஒப்பந்தத்திலிருந்து பிரபா – ரணில் உடன்படிக்கை ஊடாக ஜெனிவா தீர்மானங்கள் வரை இதுவே இடம் பெற்றுள்ளது.

எனவே இந்தத்தடவையும் ஜெனிவாவின் தீர்மானங்கள் அனைத்திற்கும் தலையாட்டும். இந்த தலையாட்டுதல் ஊடாக இலங்கைக்கு எதிராக ஜெனிவா அதிகதூரம் செல்லாமல் தடுக்கப் பார்க்கும். தேவையான காலஅவகாசத்தையும் பெற்றுக் கொள்ளும். ஆனால் தீர்மானங்கள் எவற்றையும் அது நடைமுறைப்படுத்தப்போவதில்லை.

இந்தத்தடவை வெளிநாட்டமைச்சர் அலிசப்ரியுடன் கூடவே நீதியமைச்சர் விஜதாச ராஜபக்ஷவும் பயணமாகின்றார். அலிசப்ரிக்கு முஸ்லிம் முகம் இருப்பதனால் மேற்காசிய முஸ்லிம் நாடுகளையும், ஆபிரிக்க முஸ்லிம் நாடுகளையும் கவருவதற்கு முயற்சிக்கப்படும். நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிற்கு மேற்குலக ஜனநாயக முகம் உண்டு. கோட்டாபய அரசிற்கு எதிராக முதலில் போராட்டம் நடத்தியவரும் அவர் தான். இது மேற்குலகத்தையும் அதற்கு ஆதரவாக உள்ள சிறிய நாடுகளையும் கவரக்கூடியதாக இருக்கும்.

பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் தொடர்பாக காணாமல்போனோர் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம் என்பன தூசி தட்டப்பட்டு பெருப்பித்துக் காட்டப்படும். நல்லிணக்க செயற்பாட்டிற்கு சர்வகட்சி அரசாங்கம் அமைக்கும் முயற்சிகள் காட்டப்படும். அரசாங்கம் தயார். தமிழ்த்தரப்புத் தான் தயாராகவில்லை என்ற தோற்றப்பாடும் காட்டப்படலாம்.

புலம்பெயர் அமைப்புக்களின் தடை நீக்கம், புலம்பெயர் அலுவலகம், புலம்பெயர் நிதியம் என்பனவவும் மகத்தான அடைவாகக்காட்டப்படும். இனவேறுபாடுகள் இன்றி அனைத்து இனங்களுக்கும் சமவாய்ப்புக்களை அளிக்கின்றோம் என்று கூறப்படும். பல தமிழ் புலம் பெயர் அமைப்புக்கள் தம்முடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறப்படும். பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு தேசியப்பாதுகாப்புச்சட்டம் கொண்டு வரப்படும் முயற்சியும் கூறப்படலாம்.

அரசாங்கத்தரப்பிற்கு சற்று சவாலாக இருக்கப்போவது அண்மைய ஜனநாயகப் போராட்டங்களுக்கு எதிரான அடக்கு முறையும், அதற்கு பயங்கரவாதத்தடைச்சட்டம் பயன்படுத்துகின்றமையும் தான். மேற்குலகம் ராஜபக்ஷக்களை பலவீனமாக்கும் வரையும், சீனாவின் ஆதிக்கத்தைக் கீழிறக்கும் வரையும் காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் முழுமையாக அகற்றப்படுபவதை விரும்பவில்லை.  அதேவேளை முறைமை மாற்றம் என்ற போராட்டக்காரர்களின் இலக்கு முன்நோக்கிச் செல்வதையும் , போராட்டக்களம் இடது சாரி பின்புலம் உள்ளவர்களின் கைகளில் வீழ்வதையும் அனுமதிக்கத்தயாராக இல்லை. தங்களுடைய நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தும் அளவிற்கு மட்டும் போராட்டக்களம் இருப்பதையே விரும்புகின்றது.

மேற்குலகத்தைப் பொறுத்தவரை அவர்களுடைய நிகழ்ச்சி நிரலின் முதலாவது கட்டம் முடிவடைந்துள்ளது. ராஜபக்ஷக்களை நேரடி அதிகாரத்திலிருந்து அகற்றுவது தான் முதலாவது கட்டம். இக்கட்டம் வெற்றி கரமாக நிறைவடைந்து விட்டது. இரண்டாவது ராஜபக்ஷக்களின் மறைமுக அதிகாரத்தைக்கட்டுப்படுத்தி ரணிலை பலப்படுத்துவது தான். சர்வகட்சி அரசாங்க முயற்சி அதற்காகவே மேற்கொள்ளப்படுகின்றது. மூன்றாவது கட்டத்தில் பச்சை அணியை அதிகாரத்திற்கு கொண்டு வரப்படும் முயற்சி மேற்கொள்ளப்படலாம்.

இதற்கு சஜித் அணியையும் ரணில் அணியையும் இணைக்க வேண்டும் என்பது பிரதான நிபந்தனையாக உள்ளது. இந்த நிபந்தனையை நிறைவேற்ற வேண்டுமாயின் சஜித் அணி பலவீனமாக்கப்படல் வேண்டும். அதற்காகத் தான் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து கழற்றி எடுக்கும் பணிகள் இடம்பெறுகின்றன. இன்னோர் பக்கத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் இருக்கும் மலையக முஸ்லிம் கட்சிகளையும் கழற்றுவதற்கு முயற்சிக்கப்படுகின்றன.

2023ஆம் ஆண்டு மார்ச் வரை இந்த முயற்சிகள் இடம்பெறும். மார்ச்சில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பச்சை அணியை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் இடம்பெறலாம். அதற்கிடையில் உள்ளுராட்சி சபைத்தேர்தலை நடாத்தி மொட்டுக்கட்சியை பலவீனப்படுத்தும் முயற்சிகளும் இடம்பெறும். மூன்றாவது கட்டம் சீனாவின் ஆதிக்கத்தை கீழிறக்குவதாகவே இருக்கும். மேற்குலகின் இந்த நிகழ்ச்சி நிரலுக்கு தடையாக இருக்கப்போறவை பெருந்தேசியவாதமும், தமிழ்த்தேசியமும் தான். அதனை முகம் கொள்வதற்கான வேலைத்திட்டங்களும் சமகாலத்தில் முன்னெடுக்கப்படலாம்.

அடுத்து தமிழ்த்தரப்பின் நகர்வுகள். ஜெனிவாக்காலம் முழுவதும் தமிழ்த்தரப்பின் நகர்வுகள் கவலைக்குரியதாகவே இருந்தன. ஜெனிவா போன்ற சர்வதேச விவகாரங்களைக் கையாளும் போது ஒருங்கிணைந்த அணுகுமுறை அவசியம். அமைப்புக்களின் ஒருங்கிணைந்த அணுகுமுறை இல்லா விட்டாலும் குறைந்த பட்சம் இலக்குகளிலாவது ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவையாக உள்ளது. கவலையளிக்கும் வகையில் அமைப்பு சார்ந்த ஒருங்கிணைவும், இலக்கு சார்ந்த ஒருங்கிணைவும் இல்லாத நிலையே காணப்படுகின்றது. துண்டு துண்டான அணுகுமுறையே பின்பற்றப்படுகின்றது.

தாயகத்திலிருந்து மூன்று விதமான அணுகுமுறைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கூட்டமைப்பின் தீர்மானிக்கின்ற சக்தியாக இருக்கின்ற சுமந்திரன் மேற்குலகின் நிகழ்சி நிரலோடு ஒத்தோடுவதிலேயே கவனமாக இருக்கின்றார். அந்த நிகழ்ச்சி நிரலின் மையவிடயம். தமிழ்த்தேசியம் நீக்கம் செய்யப்பட்ட அரசியலைக் கட்டியெழுப்புவதேயாகும். அதற்கேற்ற வகையில் பெருந்தேசிய வாதத்தின் லிபரல் அணிக்குள் தமிழ்த்தேசிய அரசியலை கரைக்கும் முயற்சி முன்னெடுக்கப்படுகின்றது.

ஆறு கட்சிகளின் கூட்டணி இந்திய நிகழ்சி நிரலின் கீழியங்குகின்ற தோற்றத்தையே காட்டுகின்றது. ஜெனிவா தொடர்பான வலூன அறிக்கையை அனுப்பியிருந்தாலும் 13ஆவது திருத்தத்துடன் மட்டுப்படக்கூடிய போக்கே நடைமுறையில் உள்ளது. உட்கட்சி அரசியலும் இதில் பங்கு செலுத்துகின்றது. சுமந்திரனின் தனித்த ஓட்டத்தை உடைப்பது தான் உட்கட்சி அரசியலின் இலக்கு. மாவை இரட்டைத்தோணியில் கால் வைத்துக் கொண்டிருக்கின்றார்.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஜெனிவாவை கையாளும் எந்தச் செயற்பாட்டையும் முன்னெடுப்பதாகத் தெரியவில்லை. அறிக்கை அனுப்பும் முயற்சிகளும் இதுவரை நடக்கவில்லை. ஒருங்கிணைந்த செயற்பாடு தொடர்பாக தீண்டாமைக்கொள்கையையே அது பின்பற்றுகின்றது.

புலம்பெயர் தமிழ்த்தரப்பு வலுவான செயற்பாடுகளை ஜெனிவா தொடர்பாக முன்னெடுத்து வருகின்றது. ஆனால் அங்கும் ஒருங்கிணைந்த அணுகுமுறை வலுவாக இல்லை. போதிய அடைவுகள் கிடைக்காமைக்கு ஒருங்கிணைந்த அணுகுமுறை இல்லாததும் ஒரு காரணம். எனினும் தமிழ்த்தேசிய அரசியலை சர்வதேச மட்டத்தில் பேசுபொருளாக்கும் அதன் உழைப்பை ஒரு போதும் குறைத்து மதித்து விட முடியாது. அடுத்த வாரம் தமிழ்த்தரப்பு ஜெனிவா தொடர்பாக எடுக்க வேண்டிய கோட்பாட்டு முடிவுகளையும் ஜெனிவாவின் முக்கியத்துவத்தையும் பார்ப்போம். ஒரு காரணம். எனினும் தமிழ்த்தேசிய அரசியலை சர்வதேச மட்டத்தில் பேசுபொருளாக்கும் அதன் உழைப்பை ஒரு போதும் குறைத்து மதித்து விட முடியாது. அடுத்த வாரம் தமிழ்த்தரப்பு ஜெனிவா தொடர்பாக எடுக்க வேண்டிய கோட்பாட்டு முடிவுகளையும் ஜெனிவாவின் முக்கியத்துவத்தையும் பார்ப்போம்.