உதயமாகிறது விமல் வீரவன்சவின் அரசியல் கூட்டணி

75 0

பாராளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகிய தரப்பினரது அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்த பரந்துப்பட்ட அரசியல் கூட்டணி ஞாயிற்றுக்கிழமை (4) மாலை 03.00 மணியவில் உத்தியோகப்பூர்வமாக ஸ்தாபிக்கப்படவுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தலைமையில் ஸ்தாபிக்கப்படும் இந்த கூட்டணியின் கொள்கை பிரகடனம் இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தியோகப்பூர்வமாக வெளிப்படுத்தப்படும்.

தேசிய சுதந்திர முன்னணி,இடதுசாரி ஜனநாயக முன்னணி,பிவிதுறு ஹெல உறுமய,இலங்கை கம்யூனிச கட்சி,லங்கா சமசமாஜ கட்சி, யுதுகம தேசிய அமைப்பு, விஜய தரணி தேசிய சபை,உள்ளிட்ட 09 அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்ததாக இந்த கூட்டணி ஸ்தாபிக்கப்படவுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 02 ஆம் திகதி அப்போதைய அமைச்சரவையில் அமைச்சு பதவிகளை வகித்த உதய கம்மன்பில, வாசுதேச நாணயக்கார மற்றும் விமல் வீரவன்ச தலைமையிலான தரப்பினர் ‘முழு நாடும் சரியான பாதைக்கு’என்ற தொனிப்பொருளில் மாநாடு ஒன்றை நடத்தினர்.

இந்த மாநாட்டின் போது அரசாங்கத்தின் குறைப்பாடுகள் கடுமையாக சுட்டிக்காட்டப்பட்டதை தொடர்ந்து மார்ச் 03ஆம் திகதி கைத்தொழில் வளங்கள் அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்த விமல் வீரவன்ச, வலுசக்தி அமைச்சராக பதவி வகித்த உதய கம்மன்பிலவை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கினார்.

பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து ஆட்சிமாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உட்பட,விமல் அணியினர் பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்தனர்.

எதிர்வரும் காலங்களில் பொதுஜன பெரமுன கட்சியுடன் ஒன்றிணைந்து தேர்தல்களில் போட்டியிட போவதில்லை என அறிவித்து விமல் வீரவன்ச அணியினர் புதிய அரசியல் கூட்டணியை ஸ்தாபிக்கவுள்ளனர்.