வரி அதிகரிப்பால் சாதாரண மக்களுக்கே அதிக பாதிப்பு

117 0

ஜனாதிபதியின் வரிக்கொள்கையால் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கே அதிக பாதிப்பு ஏற்படப்போகின்றது. அதனால் அதிக வருமானம் பெறுபவர்களுக்கு அதிக வரி அறவிடும் வகையில் வரி திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷடி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நிதி அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவு திட்ட அறிக்கை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்ப்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு நீண்டகாலத்துக்கு முன்னர் மேற்கொள்ளவேண்டிய வேலைத்திட்டத்தை தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடைக்கால வரவு செலவு திட்ட யோசனையாக முன்வைத்திருக்கின்றார். நாங்கள் தெரிவித்த பல விடயங்கள் இதில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக பொதுஜன பெரமுன கட்சி எதிர்ப்பு தெரிவித்த விடயங்களே நூற்றுக்கு 80 வீதம் இருக்கி்ன்றது. அதனால் இதனை எவ்வாறு செயற்படுத்தப்போன்றது என்பதே எமக்குரிய பிரச்சினையாக இருக்கின்றது.

அத்துடன் பொருளாதார மறுசீரமைப்புக்கு நாங்கள் இணக்கம். பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாங்களே ஆரம்பத்தில் தெரிவித்தோம். சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்லுமாறு 2020இல் நாங்கள் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தோம்.

ஆனால் எமது சடலங்களுக்கு மேலாகவே செல்லவேண்டிவரும் என பொதுஜன பெரமுனவே தெரிவித்து வந்தது. அதனால்தான் நாடு இன்று பாதாளத்துக்கு சென்றிருக்கின்றது. என்றாலும் தற்போது இந்த வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவளிக்கவேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

அத்துடன் ஜனாதிபதி முன்வைத்திருக்கும் வரிக்கொள்கையில் எமக்கு பூரணமாக இணங்க முடியாது. வட்வரி 12வீதத்தில் இருந்து 15வீதமாக அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. அதேநேரம் வருமான வரியாக நூற்றுக்கு இரண்டரை வரி அறவிடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் வரி நூற்றுக்கு 20வரை அதிகரிக்கப்படுகின்றது. இந்த வரியால் குறைந்த வருமானம் பெறுநர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். அதிக இலாபம் பெறுநர்களிடம் அதிக வரி அறவிடும் வகையில் வரி திருத்தம் மேற்கொள்ளப்படும் என்றே நாங்கள் எதிர்பார்த்தாேம். அதனால் இந்த கொள்கை தொடர்பில் எமக்கு திருப்தியடைய முடியாது.

அத்துடன் மொட்டு கட்சியினர் எப்போதும் சமுர்த்தி நிவாரண திட்டத்தை அரசியலுக்காக பயன்படுத்தி வந்தார்கள். அதனால் தற்போதும் மக்களுக்கான நவாரணங்களை சமுர்த்தி நிவாரண திட்டம் ஊடாக வழங்குவதற்கே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஆனால் வருமானம் குறைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு சுயாதீனமான முறை ஒன்று இருக்கவேண்டும் என்றே நாங்கள் தெரிவிக்கின்றோம் என்றார்.