அரசாங்கம் முன்னுரிமை கொடுக்க வேண்டிய 3 செயற்பாடுகள்

162 0

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடுதிரும்புவதற்கு வசதியான ஏற்பாடுகளைச் செய்து அவரை பிரதமராக நியமிக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு ஆளும் கட்சி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

பொருளாதார வீழ்ச்சிக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்கள் ஜூலையில் ஜனாதிபதி மாளிகையை முற்றுயைிட்டதை அடுத்து முன்னாள் ஜனாதிபதி நாட்டில் இருந்து வெளியேறினார். அவர் தஞ்சம் கோரி நாடு விட்டு நாடு அலைவதைக் காண பலரும் விரும்பவில்லை.

போராட்ட இயக்கத்தை ஆதரித்தவர்கள் கூட அவர் நாடு திரும்புவதை எதிர்க்கப்போவது சாத்தியமில்லை.ஆனால், அரசியல் விவகாரங்களில் அவர் தீவிரமாக பங்கேற்பதை ஊக்கப்படுத்தும் எந்தவொரு முயற்சியும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கும் என்பதுடன் ‘ கோட்டா கோ ஹோம் ‘ போராட்டத்தின் பிதான குறிக்கோளுக்கு எதிரானதுமாகும்; அரசாங்கத்தையும் வலுவிழக்கச்செய்யும்.

பெரும்பாலான அதிகாரங்களை தன்வசம் வைத்திருந்த அரசியல் தலைவர் என்ற வகையில், நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பானவர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் ஜனாதிபதியே போராட்ட இயக்கத்தின் பிரதான இலக்காக இருந்தார்.

இரசாயன உரவகைகளைத் தடை செய்து இரவோடிரவாக இலங்கையின் விவசாயத்தை இயற்கை விவசாயமாக மாற்றுவதற்கு அவர் மேற்கொண்ட  தவறான ஆலோசனையின் அடிப்படையிலான தீர்மானம் போன்ற வேறு காரணங்களும் இருக்கின்றன.அந்த கொள்கை ஒரு  சில மாதங்களுக்குள்ளாகவே விவசாயிகளுக்கு பெரும் அவலத்தை ஏற்படுத்தியதைக் காணக்கூடியதாக இருந்தது.

மேலும், முன்னாள் ஜனாதிபதியைப் பிரதமராக்குவது அரசாங்கத்திற்குள் செல்வாக்குமிக்க பிரிவொன்றின் தலைவரும்  விளங்குபவரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தனிப்பட்ட முறையில் நெருக்கமானவருமான தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தனவை பதிலீடு செய்வதாகவே அமையும்.

விக்கிரமசிங்கவுடனான அவரின் நெருக்கம் இருவரும் இணைந்து செயற்படுவதற்கு வசதியான சூழ்நிலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.ஜனாதிபதிக்கு ஏதாவது நேர்ந்தால் அவரின் இடத்துக்கு வருபவர் பிரதமர் என்ற முறையில் இந்த விவகாரம் மீது இறுதி முடிவெடுப்பதில் அவரும் ஒரு பங்கை வகிக்கும் சாத்தியம் இருக்கிறது எனலாம்.

ஆளும் கட்சியைச் சேர்ந்த பல முக்கியஸ்தர்களை  அமைச்சர்களாக நியமிக்குமாறு விடுக்கப்ட்டிருக்கும் மற்றைய வேண்டுகோளை ஏற்றுக்கொள்வது ஜனாதிபதியைப் பொறுத்தவரை கஷ்டமானதாக இருக்கும்.அவர்களில் பலர் பெருமளவு ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களாக இருப்பதுடன் போராட்ட இயக்கத்தின் முக்கிய கவனத்துக்குரியவர்களாகவும் விளங்கினர்.

தற்போது மீண்டும் அமைச்சர்களாக வரவேண்டும் என்று விரும்புபவர்கள் முன்னர் அரசாங்கத்தில் வகித்த பதவிகளில் இருந்து இராஜினாமா செய்தவேளையில் பிரதமர் பதவியை பொறுப்பேற்பதற்கு விக்காரமசிங்க முன்வந்தது குறித்து அவர் மீது கடுமையான அதிருப்தியும் ஏற்கெனவே இருக்கிறது.

அந்த நேரத்தில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியை ஏற்றதால் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களைச் செய்தவர்கள் காப்பாற்றப்பட்டார்கள் என்று மக்கள் மத்தியில் எண்ணம் ஏற்பட்டது.அந்த எண்ணம் தொடர்ந்தும் இருக்கிறது.

இப்போது மீண்டும் அவர்கள் அமைச்சர்களாக வந்தால் அதற்கான சூழ்நிலை உருவாக காரணமாக இருந்தவர் ஜனாதிபதியே என்ற எண்ணம் வலுப்பெறும்.தங்களுக்கு மீண்டும் அமைச்சர் பதவிகள் தரப்படவேண்டும் என்று விரும்புபவர்கள் தங்களுக்கு வாக்களித்து அதிகாரத்துக்கு கொண்டுவந்த மக்கள் மத்தியில் தாங்கள் நம்பிக்கையையும் நியாயப்பாட்டையும் இழந்துவிட்டதை விளங்கிக்கொள்ளவில்லை என்றே தெரிகிறது.அவர்கள் தங்களது தொகுதிகளுக்கு சென்று  சர்வதேச நாணய நிதியத்தினால் முன்வைக்கப்படக்கூடிய நிபந்தனைகள் எவ்வாறு பாதிப்புக்களை ஏற்படுத்தப்போகிறது என்பதை மக்களுக்கு கூற இயலாதவர்களாக இருக்கிறார்கள்.

மீள்விக்கப்பட்ட வழமைநிலை

ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் முதல் ஐந்து  வாரங்கள் குறித்து மக்கள் மத்தியில் நேர்மறையானதும் எதிர்மறையானதுமான பிரதிபலிப்புக்களை ஏற்படுத்தியிருக்கின்றன. போராட்ட இயக்கத்தை படைபலம் கொண்டு ஒடுக்கும் அவரது நடவடிக்கைகள் அவரை தேசிய அரசியலில் தாராளபோக்குடைய ஒரு  மிதவாத தலைவராக நோக்கியவர்களுக்கு பலத்த ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது.அடிப்படையில் விக்கிரமசிங்கவின் அரசியல் எதிரிகளுக்கு எதிரானதாக அமைந்த  போராட்ட இயக்கத்தை ஆதரித்தவர்களுக்கு போராட்டக்காரர்கள்  மீது அவருக்கு அனுதாபம் இல்லாமல் போனதை விளங்கிக்கொள்ளமுடியாமல் இருக்கிறது.அதே போராட்டம் தான் இவர் அதிகாரத்துக்கு வருவதற்கு வழிவகுத்தது.

கொழும்பு காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்துக்கு வெளியே போராட்டக்களத்தை  நள்ளிரவு படையினர்  முற்றுகையிட்டு நித்திரையில் இருந்த நிராயுதபாணிகளான போராட்டக்காரர்கள் மீது  கொடூரமான முறையில் நடத்திய தாக்குதல் தொடங்கி ஜனாதிபதியின் பியர் குவளையை நினைவுச்சின்னமாக எடுத்தச் சென்றவர் உட்பட சட்டத்துக்கு புறம்பாக அற்ப செயல்களைச் செய்தவர்களை வேட்டையாடுவதுவரை  அரசாங்கத்தின் அடக்குமுறை பெரும் அதிர்ச்சியைத் தந்திருக்கிறது.இந்த நடவடிக்கைகளை இலங்கையின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் நாட்டு நலனில் அக்கறை கொண்ட பிரசைகள் மாத்திரமல்ல, சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களும் உன்னிப்பான கவனத்தில் எடுத்திருக்கின்றன.

கடந்த மாதத்தில் ஒரு தளர்வான வழமைநிலை  ஏற்படுத்தப்பட்டதை காணக்கூடியதாக இருந்தது.மெய்யான வழமைநிலை போன்று இது காணப்படாவிட்டாலும் மக்கள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள் போன்று தெரிகிறது.மின்வெட்டும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளும் சில வாரங்களாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.ஆனால் தொடர்ந்தும் இதே நிலை நீடிக்குமா என்ற அச்சமும் இருக்கிறது போன்று தெரிகிறது.

நாட்டுக்கு வந்திருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு நடத்துகின்ற பேச்சுவார்த்தைகள் எதிர்பார்க்கப்படுகின்ற நிதியுதவிகள் விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையை கொடுத்திருக்கின்றன.சிறுவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்தில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதை உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.மக்களில் கணிசமான பிரிவினர் தங்கள் வாழ்க்கையை ஓட்டுவதற்கு பெரும் கஷ்டப்படுகிறார்கள் என்பதையும் உகந்த உணவை நேடமுடியாதவர்களாக இருக்கிறார்கள் என்பதையுமே இது காட்டுகிறது.வீடுகளுக்குள் உள்ள இந்தப் பிரச்சினை புதிய போராட்டங்கள் மூலமாக இன்னும் வெளிக்காட்டப்படவில்லை.

போராட்ட இயக்கம் இடதுசாரிகளாலும் தீவிரவாதிகளினாலும் கடத்திச்செல்லப்பட்டுவிட்டது என்ற வாதம் அந்த இயக்கத்தை பலவந்தமாக ஒடுக்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது.ஆனால் இந்த படைபலப் பிரயோகமும் தவறான கற்பிதங்களும் நீண்டகால நோக்கில் பெரும் பிரச்சினையைத் தோற்றுவிக்கும்.

மறுபுறத்தில், ஜனாதிபதி விக்கிரமசிங்கவை நிராகரிப்பதற்கு  முன்னதாக அவருக்கு கூடுதல் கால அவகாசத்தை வழங்குவதற்கு மக்கள் தற்போது பெரும்பாலும் முன்வருகிறார்கள் போன்று தெரிகிறது.உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் விவகாரங்களை நன்கு விளங்கிக்கொண்டுள்ள அனுபவ முதிர்ச்சியுடைய அரசியல்வாதியான ஜனாதிபதி இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு முக்கியமாக தேவைப்படுகின்ற சர்வதேச சமூகத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு பொருத்தமானவர் என்று பொதுவில் ஏற்றுக்கொள்ளப்டுகிறது.தாராளவாத போக்குடைய மிதவாதியான ஜனாதிபதி இன, மத அடிப்படையில் பாரபட்சம் காட்டுகின்ற சிந்தனைப்போக்கையோ அல்லது சமூகங்களுக்கு எதிராக வன்மத்தைச் சாதிக்கின்ற சுபாவத்தையோ கொண்டிராத ஒருவர் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

டி.பி.விஜேதுங்க,சந்திரிகா குமாரதுங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் ஜனாதிபதிகளாக இருந்தபோது பிரதமராக பதவிவகித்த விக்கிரமசிங்க சமாதானம், நல்லிணக்கம் தொடர்பான விவகாரங்களில் கூடுதல் கரிசனை காட்டிய ஒருவராகவும் சர்வதேச மற்றும் மனிதஉரிமைகள் நியமங்களின் வழியில் சிவில் சமூகத்தை அனுசரிக்கும் ஒருவராகவும் நோக்கப்பட்டவர்.

அவசரமான செயற்பாடுகள்

பொதுவில் அரசாங்கமும் குறிப்பாக ஜனாதிபதியும் அவசரமாக மூன்று செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டிய தேவை இருக்கிறது.போராட்ட இயக்கத்துக்கு எதிராக தற்போது மேற்கொள்ளப்படுகின்ற  நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டும்.அந்த நடவடிக்கைகளின் மட்டுமீறிய தன்மை அரசாங்கத்துக்கு நாட்டுக்குள்ளும் சர்வதேச சமூகத்தின் மத்தியிலும் அபகீர்த்தியை ஏற்படுத்துகின்றது.

ஊழல் தொடர்பில் அதிகார துஷ்பிரயோகத்தைச் செய்தமைக்காக நீதிமன்றங்களினால் குற்றவாளிகளாக காணப்பட்டவர்கள் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.இந்த செயலுடன் ஒப்பிடும்போது தற்போது இடம்பெறுகின்ற கைது நடவடிக்கைகளின் மட்டுமீறிய தன்மையை  புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.

இந்த சமச்சீரற்ற அடக்குமுறைக்கான முழுப்பொறுப்பும் முற்றுமுழுதாக ஜனாதிபதி மீதே சுமத்தப்படும். ஏனென்றால் அவரே பாதுகாப்பு அமைச்சராகவும் முப்படைகளின் பிரதம தளபதியாகவும் இருப்பதுடன் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கின்ற அரசியலமைப்புக்கான 20 வது திருத்தத்தின் கீழான சர்வ அதிகாரங்களையும் கொண்டவராகவும் இருக்கிறார்.தன்னைப் பற்றி நிலவுகின்ற தப்பெண்ணத்தை அவர் நீக்கவேண்டியது முக்கியமானதாகும்.அரசாங்கத்தின் குண்டர்கள் ஒருபோதும் நீதியின் முன் நிறுத்தப்படுவது சாத்தியமில்லை என்ற உண்மையை ஒத்துக்கொண்டு போராட்ட இயக்கத்தில் ஈடுபட்மைக்காக கைதானவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படுவதை  உறுதிசெய்வதன் மூலமாக இதை அவர் செய்யலாம்.

இரண்டாவதாக ,  அரசாங்கம் அதன் பொருளாதாரத் திட்டத்தைப் பற்றி பெருமளவுக்கு வெளிப்படையானதாக இருக்கவேண்டும்.இதுவே பொதுமக்களைப் பொறுத்தவரை முக்கிய கரிசனைக்குரியதாக இருக்கிறது.கொழும்பில் அண்மையில் பெட்ரோலுக்கும் டீசலுக்கும் ஏற்பட்ட தட்டுப்பாட்டின் காரணமாக தோன்றிய நீண்ட வரிசைகள் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மக்கள் அவசரப்பட்டு எரிபொருட்களை வாங்குவதற்கு முண்டியடிப்பதற்கு வழிவகுத்தது.மின்வெட்டு நேரம் நீடிக்கப்படலாம் என்ற ஊகங்களும் அடிபடுகின்றன.300 க்கும் அதிகமான பொருட்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருக்கும் தற்காலிக தடை சர்வதேச நாணய நிதியத்தின் நிதியைப் பெறுமுகமாக முன்னெடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகளுக்கான அறிகுறியாகும்.

வெளிப்படைத்தன்மை இல்லையானால், அரசியல் ரீதியிலும் தனிப்பட்ட ரீதியிலும் தனக்கு அனுகூலமான முறையில் பொருளாதார மறுசீரமைப்பு செயன்முறையை முன்னெடுக்க கூடுதல் ஆற்றல் தனக்கு கிடைக்கும் என்று நம்புவதனாற்போலும் அரசாஙகம் பொருளாதாரத்திட்டத்தை வெளிப்படையாக முன்வைக்க விரும்பாமல் இருக்கக்கலாம்.ஆனால் இது அரசாங்கம் நியாயப்பாடு இல்லாத ஒன்று என்று ஏற்கெனவே உணருகின்ற மக்கள் பிரிவினரிடமிருந்து மேலும் தனிமைப்படவே வழிவகுக்கும்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டிருப்பதைப் போன்ற பொருளாதார நெருக்கடி பெரும்பாலான ஜனநாயக நாடுகளில் தோன்றியிருந்தால் அரசாங்கம் பதவியில் இருந்து இறங்கி புதிய தேர்தல்கள் நடத்தப்படுவதற்கு வழிபிறந்திருக்கும்.ஆனால், ஜனாதிபதியோ அல்லது தற்போதைய அரசாங்கமோ பதவி விலகவோ அல்லது பாராளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தல்களை நடத்துவதற்கோ விருப்பத்தை வெளிக்காட்டவில்லை.20  வது திருத்தத்தின் கீழ் அடுத்த வருடம் பெப்ரவரி  யில் மாத்திரமே பாராளும்றத்தைக் கலைப்பதற்கான சட்ட அதிகாரத்தை ஜனாதிபதி விக்கிரமசிங்க பெறுவார்.அதேவேளை அரசாங்கம் மாகாணசபை தேர்தலை நடத்தமுடியும்.

மாகாணசபைகளை மீண்டும் ஏற்படுத்தினால்,தீர்மானங்களை எடுக்கும் பதவிகளுக்கு புதிய மக்கள் ஆணையுடன் பிரதிநிதிகளை கொண்டுவருவதன் மூலம் அரசாங்க முறைமைக்கு நியாயப்பாட்டை மீள ஏற்படுத்தமுடியும் என்பதுடன் சமூகத்தில் பதற்றத்தை தணிக்கக்கூடியதாகவும் இருக்கும்.இதனால் பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கு தேவையான போதுமான கால அவகாசம் அரசாங்கத்துக்கு கிடைக்கக்கூடியதாகவும் இருக்கும்.

இலங்கை நிலைபேறான தேசிய பொருளாதார பாதையில்  பயணிக்க வேண்டுமாக இருந்தால் பொதுவில் அரசாங்கமும் குறிப்பாக ஜனாதிபதியும்( அவர் மீதே கூடுதல் நம்பிக்கை வைக்கப்படுகிறது) காலத்தின் சோதனைக்கு நின்றுபிடிக்கக்கூடிய கொள்கைகளை வகுக்கவேண்டியது அவசியமாகும்.

கலாநிதி ஜெகான் பெரேரா