சென்னையில் சாலை ஓரங்களில் நோ-பார்க்கிங் பகுதிகளில் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்படுவது தொடர் கதையாக உள்ளது. இதனால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலையில் சாலையில் நோ-பார்க்கிங் பகுதிகளில் வாகனங்கள் நிறுத்துவதை தடுப்பதற்காக கடும் நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையை வடசென்னை பகுதிகளில் சென்னை மாநகராட்சி தொடங்கி உள்ளது.
திருவொற்றியூர் மண்டலத்தில் சட்ட விரோதமாக சாலை ஓரங்களில் வாகனம் நிறுத்துவதை தடுக்கும் வகையில் நோ-பார்க்கிங் பகுதியில் சாலையில் நிறுத்தப்படும் கார்களில் நோட்டீஸ் ஒட்டும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கி உள்ளது. சாலையில் நோ-பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களில் முதலில் நோட்டீஸ் ஒட்டி அறிவிப்பு செய்கிறோம்.
அப்போது அவர்களுக்கு அபராதம் விதிக்க மாட்டோம். அதே வாகனம் மீண்டும் நோ-பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டால் போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து வாகனத்தை இழுத்து செல்கிறோம். பின்னர் அந்த வாகனம் கோட்டில் ஒப்படைக்கப்பட்டு விதி மீறலுக்காக நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் பாதுகாப்பான வாகன நிறுத்துமிடங்களை ஊக்குவிக்கவும், நெரிசலை குறைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஒரு மணிநேரத்துக்கு ரூ.40 கட்டணத்தில் வாகனத்தை நிறுத்துவதற்காக மேலும் 88 இடங்களில் பார்க்கிங் வசதியை மாநகராட்சி செய்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

