கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே 2 தடுப்பணைகள் கட்ட ஆந்திர அரசு திட்டமிட்டு நிதி ஒதுக்கி உள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இந்த நிலையில் கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை கட்டும் ஆந்திர அரசை கண்டித்து பள்ளிப்பட்டு பேரூராட்சி அலுவலக எதிரே பா.ம.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். அப்போது ஆந்திர அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாநிலத் துணைத் தலைவர் வைத்தியலிங்கம், மாநில செயற்குழு உறுப்பினர் பாலயோகி, மாநில அமைப்பு துணைச் செயலாளர் வெங்கடேசன், மாவட்டத் தலைவர் விஜயன், மாவட்ட செயலாளர் தினேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் கார்த்திக், மாவட்டத் துணைச் செயலாளர் லோகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

