2022 ஆம் ஆண்டின் எஞ்சியுள்ள காலப்பகுதிக்கான அரசின் ஒதுக்கீட்டுச் சட்டத்திற்கான இரண்டாவது மதிப்பீடு தற்போது ஜனாதிபதியும்,நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்படுகிறது.
- பொருளாதார மேம்பாட்டுக்காக பல்வேறு மறுசீரமைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றுக்கமைய பொருளாதார வளர்ச்சி வேகத்தை 5 சதவீதத்தினால் அதிகரிக்க முடியும் என எதிர்பார்த்துள்ளோம்.
- பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஏற்கனவே உறுதியளிக்கப்பட்டவாறு நிவாரணங்கள் வழங்கப்படும்
- அரச வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய வேலைத்திட்டங்களை 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தை இலக்காகக் கொண்டு முன்வைக்கவுள்ளோம். அரச வருமானம் அதிகரிக்கும் போது பணத்தை அச்சிட வேண்டிய தேவை படிப்படியாகக் குறைவடையும்.
- இடைக்கால வரவு செலவுத் திட்டத்திற்கமைய 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவரும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்யுமாறு முன்மொழியப்படுகிறது.
- சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு வார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்து வருகின்றன.
- வட் வரி செப்டம்பர் முதலாம் திகதி முதல் 12 வீதத்தில் இருந்து 15 வீதமாக அதிகரிக்கப்படும்.
- அரச உத்தியோகத்தர்கள் ஓய்வுபெறும் வயதெல்லை 60 ஆகக் குறைக்கப்படும்.
- எதிர்காலத்தில் அரச சேவைக்காக இலத்திரனியல் வாகனங்களை மாத்திரம் பயன்படுத்துவதற்கான நடவடிக்கை படிப்படியாக முன்னெடுக்கப்படும். தனியார் துறைகளையும் இதனை பின்பற்றுவதற்கு பரிந்துரைக்கப்படுகிறது.
- இலங்கை மின்சாரசபை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம், ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் தவிர 50 அரச நிறுவனங்களை மறுசீரமைப்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது.
- நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக அரச நிறுவன மறுசீரமைப்பு பிரிவை அமைக்க 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு
- மத்திய வங்கி மற்றும் பணம் அச்சிடுதல் குறித்து புதிய சட்டம் அமுல்படுத்த நடவடிக்கை.
- பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்வரும் 4 மாதங்களுக்கு மாதாந்தம் 10,000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கப்படும்.
- மண்ணெண்ணெய் விலை உயர்வினால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு விரைவில் நிவாரணம்.
- சமுர்த்தி பெறுனர்கள் , முதியோர் கொடுப்பனவைப் பெறுபவர்கள் மற்றும் நாட்பட்ட நோய்களுக்கான கொடுப்பனவை பெறுபவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவு அதிகரிக்கப்படும்.
- பெரும்போகத்தின் போது உரத்தின் விலை குறைவடையும்.
- நாட்டில் சுமார் 61,000 குடும்பங்கள் உணவு பாதுகாப்பின்றி உள்ளன. அவற்றுக்கு சர்வதேச நிதியுதவியுடன் நிவாரணங்கள் வழங்கப்படும்.
- விவசாயத் துறையில் நிலுவையிலுள்ள கடன்களை தள்ளுபடி செய்ய 350 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு.
- அரச துறையில் பணிபுரியும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து ஊழியர்களும் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதியன்று ஓய்வுபெற வேண்டும்.
- கர்ப்பிணிகளுக்கு தற்போது வழங்கப்படும் கொடுப்பனவிற்கு மேலதிகமாக மேலும் 2500 ரூபாவை வழங்கத் தீர்மானம்.
- எரிவாயு கையிருப்பினை உறுதிப்படுத்த அதன் இறக்குமதிக்காக 70 மில்லியன் டொலர் ஒதுக்கப்படும்.
- கொவிட் தொற்றினால் தொழிலை இழந்தவர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புக்களுக்கான பயிற்சியை வழங்க 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
- மலைநாட்டு பகுதிகளிலிருந்து கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களுக்கு புகையிரதத்தின் ஊடாக மரக்கறிகளை கொண்டு செல்வதற்கான செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
- கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கிளையொன்றை குருநாகலில் நிறுவுவதற்கு முன்மொழியப்படுகிறது.
- வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இலங்கையில் அவற்றின் கிளைகளை திறப்பதை ஊக்குவிக்கும் வகையில் சட்ட ஒழுங்குமுறைகளை திருத்தியமைக்க நடவடிக்கை.
நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்காக சர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளிடமும் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் நாளை புதன்கிழமை முற்பகல் 9.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்தச் சட்டமூலத்துக்கு அமைய 2021 ஆம் ஆண்டு 30 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 2 ஆவதுபிரிவின் (1) உபபிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள, இரண்டாயிருத்து எழுநூற்றுத் தொண்ணூற்றாறுபில்லியன் நானூற்றி நாற்பத்தாறு மில்லியன் ஐந்நூற்று ஐம்பத்தெட்டராயிரம் ரூபாவாவாகவிருக்கும் (ரூ.2,796,446,558,000) அரசாங்கத்தின் செலவினத்தொகையானது, மூவாயிரத்து இருநூற்றுஎழுபத்தைந்து பில்லியன் எழுநூற்றி எண்பத்தாறு மில்லியன் ஐநூற்று ஐம்பத்தெட்டு ஆயிரம் ரூபா (ரூ.3,275,876,558,000) என மாற்றப்படும்.
முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டத்துக்கு அமைய 2022 ஆம் நிதியாண்டுக்கான அரசாங்கத்தின் அமைச்சுக்களின் சேவைக்காக 2022 ஜனவரி மாதம் 01ஆம் திகதி முதல் 2022ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதிவரை 2,796.4 பில்லியன் ரூபா தொகை மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.
புதிய திருத்தத்துக்கு அமைய 2022ஆம் ஆண்டில் அரசாங்க அமைச்சுக்களின் செலவீனங்களுக்குஒதுக்கப்பட்ட வேண்டிய தொகை 3,275.8 பில்லியன் ரூபா வரை மதிப்பீடு செய்யப்பட்ட தொகை அதிகரிக்கப்படுவதுடன், இதற்கமைய 929.4 பில்லியன் ரூபாவினால் அமைச்சுக்களின் சேவைகளுக்கு அவசியமான செலவீனம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தின் 2 வது பிரிவின் (1) உப பிரிவின் (ஆ) பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள“மூவாயிரத்து இருநூறு பில்லியன் ரூபாவை விஞ்சுதலாகாது” என்ற சொற்களுக்குப்பதிலாக “நாலாயிருத்து எண்பத்தியிரண்டு பில்லியன் ரூபாவை விஞ்சுதலாகாது”எனும் சொல்லை இடுவதன் மூலம் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருத்தத்தின் விளைவாக 2022 நிதியாண்டில் இலங்கைக்குள் அல்லது அதற்கு வெளியே பெற்றுக் கொள்ளக் கூடிய கடன்பெறுகையானது 3,200 பில்லியன் ரூபாவிலிருந்து 4,082 பில்லியன் ரூபாவரைஅதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பாராளுமன்றத்தின் அனுமதியின் கீழ் கடன்பெறக்கூடிய எல்லை 892 பில்லியன் ரூபாவினால் அதிகரிக்கிறது.
2021ஆம் ஆண்டு 30ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் இரண்டாவது பிரிவின்4வது உபவிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள “இரண்டாயிரத்து அறுநூற்றி இருபத்து மூன்று மில்லியன் நானூற்று நாற்பத்து இரண்டாயிரம் ரூபாவாகவிருத்தல்” எனும்சொல்லுக்குப் பதிலாக “இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து ஒரு பில்லியன் நூற்றி இருபத்திமூன்று மில்லியன் நானூற்று நாற்பத்திரெண்டாயிரம் ரூபாவாகவிருத்தல்”எனும் சொல் இடப்படும்.
திருத்தத்தின் விளைவாக இந்த 4 வது உபபிரிவின் திருத்தத்துடன், 2022 நிதியாண்டுக்குள் சேவைக்காக திரட்டு நிதியத்தின் மீது விதிக்கப்படுவதற்கு சட்டங்களினால் அதிகாரமளிக்கப்பட்ட அரசாங்கத்தின் மதிப்பீடுசெய்யப்பட்ட செலவீனத் தொகை 2,623 பில்லியன் ரூபாவிலிருந்து 2,901 பில்லியன் ரூபாவரை அதிகரிப்பதற்கும் அனுமதிவழங்கப்பட்டுள்ளது.
ஒதுக்கீட்டுச் சட்ட திருத்தத்தின் மீதான சபை ஒத்திவைப்பு விவாதம் நாளையும், எதிர்வரும் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் இடம் பெறவுள்ளன.

