சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி இன்று ஆகும். இதனை முன்னிட்டு இன்று வடகிழக்கில் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களை கண்டறிய பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வடகிழக்கு வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டோர் அமைப்பின் ஏற்பாட்டில் கவன ஈர்ப்பு பேரணியும் ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு காந்திபூங்காவிலிருந்து வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவினர்கள் கலந்துகொண்ட கவன ஈர்ப்பு பேரணியானது ஆரம்பமாகி மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையம் ஊடாக தந்தை செல்வா சதுக்கம் வரையில் சென்றதுடன் அங்கு ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

சர்வதேசமே நீதியைப்பெற்றுத்தா,வடக்கும் கிழக்கும் தமிழர் தேசம்,நீதிக்காக போராடுபவர்களை கைதுசெய்யாதே, இனப்படுகொலை யாளிகளை சர்வதேச நீதிமன்றில் நிறுத்து,வேண்டும்வேண்டும் சர்வதேச நீதிவிசாரணை வேண்டும் போன்ற பல்வேறு வாசகங்கள் பொறித்த பதாகைகளையும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

இந்த பேரணியில் கலந்துகொண்டவர்கள் சர்வதேச நீதிவேண்டும்,நீதிக்காக போராடுபவர்களை கைதுசெய்யாதே போன்ற கோசங்களை எழுப்பியதுடன் காணாமல்போனவர்களுக்கான நீதியைபெற்றுத்தா என்ற கோசங்களையும் எழுப்பினார்கள்.

இதன்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு அனுப்பிவைப்பதான மகஜரும் வாசிக்கப்பட்டதுடன் வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் கோரிக்கைகளும் வெளியிடப்பட்டது.

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன்,தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் மற்றும் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவினர்கள் அமைப்பின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

