விடுதலைப்புலிகளால் நிர்மாணிக்கப்பட்ட பல்கலைக்கழகம் …..

248 0

யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகம் புதுப்பொலிவுடன் இயங்க போவதானது மகிழ்ச்சி தருவதாக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் கலாநிதி முருகர் குணசிங்கம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் கிளிநொச்சி மற்றும் யாழ் பல்கலைக்கழக வளாகத்தைப் பார்வையிட்ட பின் வழங்கிய செய்திக்குறிப்பிலேயே இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது,

2002ஆம் ஆண்டு தமிழீழத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் நோர்வே அரசாங்கத்தின் அணுசரணையுடன் சமாதனப் பேச்சுவார்த்தை இடம்பெற்றமையை உலகம் அறியும்.

இவ்வேளையில் தமிழீழ விடுதலைப்புலிகள் கிளிநொச்சிக்கும் முருகண்டிக்கும் இடையில் குறித்த பல்கலைக்கழகத்தை நிர்வகிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

நிதித்துறை பொறுப்பாளர் தமிழேந்தி இப் பாரிய பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

பிரபல கட்டிடக் கலைஞர் துரைராஜாவினை அவுஸ்ரேலியாவிலிருந்து வரவழைத்து ஒரு பல்கலைக்கழகத்திற்கு தேவையான சகல கட்டடங்களையும் வடிவமைக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டது.

2002ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கட்டடப்பணி 2008 பெப்ரவரி மாதத்திற்குள் சுமார் 90 வீதமான கட்டட வேலைகள் பூர்த்தியாக்கப்பட்டன.

50 ஏக்கர் காணியைச் சுற்றி நிரந்தமான வேலி போடப்பட்டது. நூலகம், விளையாட்டு மைதானம், விஞ்ஞானபீடம், கலைப்பீடம் துணைவேந்தர் வதிவிடம், பேராசியர்கள் வதிவிடம், ஆண்கள், பெண்கள் விடுதி என்பவையெல்லாம் இக்காலகட்டத்தில் பூர்த்தியாக்கப்பட்டது.

இப் பல்கலைக்கழகத்தை பல தடைவகள் தமிழேந்தியுடன் சென்று பார்வையிடுகின்ற அதற்குறிய பங்களிப்பை வழங்குகின்ற சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது.

2008 நவம்பர் மாதத்தில் இப்பல்கலைக்கழகத்தை ஆரம்பிப்பதாகவும் அப் பல்கலைக்கழகத்தின் பொறுப்பை என்னிடம் தருவதாகவும் தேசியத்தலைவர் பணித்திருந்தார்.

துரதிஷ்டவசமாக 2008 ஆண்டின் இறுதிப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் கிளிநொச்சியை விட்டு வெளியேற வேண்டிய நிலமையை சகலரும் அறிவீர்கள்.

அதன் பின்னர் 2015 வரை நான் இலங்கைக்குச் செல்லவில்லை. 2015 இலிருந்து பல தடைவைகள் தமிழீழம் செல்லுகின்ற சந்தர்ப்பம் ஏற்பட்டது.அவ்வேளையில் பல்கலைக்கழகக் கட்டிடத்தில் இலங்கை இராணுவம் குடியேறியிருப்பதாக பலர் வாயிலாக கூறப்பட்டது.அதன் காரணமாக அப்பல்கலைக்கழகத்தைச் சென்று பார்வையிட முடியவில்லை.

ஆனால் கடந்த மாதம் இறுதிப்பகுதியில் கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனும், ஏனைய சிலரும் நானும் அப்பல்கலைக்கழகத்தை சென்று பார்வையிட தீர்மானித்தோம்.

அங்கு சென்று பார்வையிட்ட போது மிகப்பெரிய ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளால் பலகோடி செலவு செய்து கட்டப்பட்ட அப்பல்கலைக்கழகம் யாழ் பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு அங்கு பொறியியல்துறை தொடங்குவதற்கான சகல முயற்சிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

இம்மகிழ்ச்சியான செய்தியை உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவே இச்செய்தியை இங்கு தருகின்றேன் என மேலும் தெரிவித்துள்ளார்.