நீதிமன்ற அவமதிப்பு குறித்து சத்தியக்கடதாசியூடாக நீதிமன்றத்திடம் நேற்றைய தினம் மன்னிப்பு கோரியுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நாளை அல்லது திங்களன்று விடுதலையாவார் என்று தான் நம்புவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளனர். குறித்த முகநூல் பதிவில் , ‘எனது அன்பிற்குரிய அரசியல் நண்பன் ரஞ்சன் ராமநாயக்க நாளை அல்லது 29 ஆம் திகதி திங்கட்கிழமை விடுதலையாவார் என நம்புகின்றேன்.
என்னுடையதும் , மனுஷ நாணயக்காரவினதும் கோரிக்கையை ஏற்று அதனை நிறைவேற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் , ஒத்துழைப்புக்களை வழங்கிய ஏனைய அனைவருக்கும் நன்றி.’ என்று அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு குறித்து சத்தியக்கடதாசியூடாக நீதிமன்றத்திடம் இன்று மன்னிப்பு கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் முதலாம் மற்றும் இரண்டாம் வழக்குகளுடன் தொடர்புடைய நீதிமன்றத்திடமே அவர் இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் கூறிய கருத்துக்கள் முற்றிலும் தவறானவை என்றும், அவற்றினால் நீதியரசர் நீதிபதி மற்றும் சட்டத்துறையில் உள்ள அனைவருக்கும் அவமரியாதை ஏற்பட்டதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் குறித்த சத்தியக்கடதாசியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னால் கூறப்பட்ட கருத்து உண்மைக்கு புறம்பானது என்றும் , எனவே தான் கூறிய கருத்தினை வாபஸ் பெறுவதாகவும், இனியொரு போதும் அவ்வாறான கருத்துக்களை வெளியிட மாட்டேன் என்றும் ரஞ்சன் ராமநாயக்க குறித்த சத்தியக்கடதாசியில் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் திகதி அலரி மாளிகைக்கு வெளியில் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில் முதலாவது வழக்கு தாக்கல் செய்யப்பட்டு , கடந்த ஆண்டு ஜனவரி 21 ஆம் திகதி ரஞ்சன் ராமநாயக்கவிற்கு உயர் நீதிமன்றத்தினால் 4 வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அதனையடுத்து முதலாவதாகக் கூறிய கருத்தினை வாபஸ் பெற முடியாது என்று நீதிமன்ற கட்டடத் தொகுதியில் வைத்து கூறியமைக்காக அவர் மீது இரண்டாவது வழக்கும் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

