தமிழக அரசியலில் அசாதாரண சூழ்நிலை நிலவி வரும் நிலையில் நேற்று வரை விகே சசிகலாவிற்கு ஆதரவு அளித்து வந்த மாஃபா பாண்டியராஜன் ‘வாக்காளர்களின் குரலுக்கு செவி சாய்ப்பேன்’ என இன்று தனது ட்விட்டரில் கருத்து பதிவு செய்திருந்தார். இதனை தொடர்ந்து தற்சமயம் அவர் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்திற்கு சென்று நேரில் தனது ஆதரவை தெரிவித்தார்.கட்சியின் ஒற்றுமைக்காகவும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகழையும் கருத்தில் கொண்டு முடிவெடுத்ததாக அவர் தெரிவித்திருந்தார்.
பன்னீர்செல்வத்திற்கு ஆதரவளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய பாண்டியராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பன்னீர்செல்வத்தை ஆதரிப்பார்கள் என்றும் பன்னீர்செல்வத்தின் தலைமையில் கட்சி கட்டுக்கோப்புடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதன் பின் பாண்டியராஜனை ஆதரித்து முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதாவது
மக்களின் கருத்தக்களை ஏற்று பாண்டியராஜன் ஆதரவு தெரிவித்துள்ளார். இன்னும் ஏராளமானோர் இங்கே வர காத்திருக்கிறார்கள். அதன்படி அமைச்சர்கள், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் இங்கே வருவார்கள்.
முதல் அமைச்சராக இங்கே வந்த பாண்டியராஜனை முதலமைச்சராக வரவேற்கிறேன். ஜெயலலிதாவின் ஆன்மா தான் எங்களை இயக்கிக் கொண்டிருக்கிறது. ஆட்சி ஒரே குடும்பத்தின் கைகளுக்கு செல்வதை தடுத்து நிறுத்துவோம். மக்கள் புரட்சி வெற்றி அடைவதற்காகவே பாண்டியராஜன் வந்து சேர்ந்துள்ளார்இவ்வாறு அவர் தெரிவித்தார்.


