கவர்னர் வித்யாசாகர் ராவுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா இன்று (சனிக் கிழமை) ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கடந்த 5.2.2017 அன்று நடந்தபோது, என்னை சட்டசபை அ.தி.மு.க. தலைவராக தேர்ந்து எடுத்தனர். இதையடுத்து இது தொடர்பான கடிதத்தை தங்களிடம் ஒப்படைப்பதற்காக நான் உங்களை சந்திக்க அனுமதி கோரி கடந்த 5.2.2017 மற்றும் 7.2.2017 ஆகிய நாட்களில் கடிதங்கள் அனுப்பினேன்.
அதை ஏற்று தாங்கள் கடந்த 9.2.2017 அன்று இரவு 7.30 மணிக்கு தங்களை சந்திக்க அனுமதி கொடுத்தீர்கள். அப்போது நான், “சட்டசபையில் எனக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பெரும்பான்மை பலம் இருப்பதால், என்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு கோரினேன்.
அந்த சமயத்தில் எம்.எல். ஏ.க்கள் கையெழுத்திட்ட ஒரிஜினல் கடிதத்தையும், அதன் நகலையும் தங்களிடம் ஒப்படைத்தேன்.
முதல் – அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்து 7 நாட்களாகி விட்டது. நீங்களும் அவர் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டீர்கள்.
எனவே தமிழ்நாட்டின் தற்போதைய அவசர சூழ்நிலையை கருத்தில் கொண்டு, உடனடியாக ஆட்சி அமைப்பதற்காக இன்றே நானும், என்னை ஆதரிக்கும் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் உங்களை சந்திப்பதற்கு அனுமதி தர வேண்டும். தமிழகத்தின் நலன் கருதி ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் மாண்பை காப்பாற்ற தாங்கள் விரைந்து செயல் படுவீர்கள் என்று நம்புகிறேன் என சசிகலா அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

