வாடகைத் தாய்மார் மூலம் 21 குழந்தைகள் – 105 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள காத்திருக்கும் பெண்

391 0

தனது கோடீஸ்வர கணவர் மூலம் வாடகைத் தாய்மாரைப் பயன்படுத்தி சோதனைக்குழாய் கருத்தரித்தலின் மூலம்  21 குழந்தைகளுக்குத் தாயான  ரஷ்யாவைச் சேர்ந்த முன்னாள் துகிலுரி நடனக்லைஞர், தனது கணவர் பண மோசடிக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு சிறைசென்றுள்ள நிலையில்  மனமுடைந்து போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான தகவல்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (21.08.2022) பிரித்தானிய ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

அவர் தனது கணவர் மூலம் வாடகைத் தாய்மாரைப்  பயன்படுத்தி 105 குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதை இலட்சியமாக  கொண்டிருந்துள்ளார்.

ஜோர்ஜியாவிலுள்ள பதுமி நகரில் தற்போது வசிக்கும் கிறிஸ்ரினா ஒஸ்துர்க் (25 வயது)  என்ற மேற்படி பெண் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையான காலப் பகுதியில் வாடகைத் தாய் குழந்தைகளைப் பெற 168,000 ஸ்டேர்லிங்  பவுண் பெறுமதியான பணத்தையும்  அந்தக் குழந்தைகளைப் பராமரிப்பதற்கான 16  பெண் பணியாளர்களுக்காக 90,000  ஸ்ரேலிங் பவுணையும் செலவிட்டுள்ளார்.

கிறிஸ்ரினாவிற்கு  இதற்கு முன்னரான காதல் தொடர்பின் மூலம் ஒரு பிள்ளை உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவர் விடுமுறையொன்றுக்குச் சென்ற போது தற்போதைய தனது கணவரான துருக்கியைச் சேர்ந்த வர்த்தகரும் மெட்ரோ துரிஸ்ம்  பஸ் கம்பனியின் உரிமையாளருமான காலிப் ஒஸ்துர்ககை சந்தித்துக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.

காலிப் கடந்த மே மாதம் பண மோசடிக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நிலையில்  வாடகைத் தாய்மார் மூலம் 105  குழந்தைகளைப் பிரசவிக்கும்  கிறிஸ்ரினாவின் திட்டம் ஸதம்பிதமடைந்துள்ளது.  காலிப்  ஏற்கனவே  1996 ஆம் ஆண்டு படுகொலை தொடர்பில் அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றமொன்று அங்கீகரித்ததையடுத்து  அவர் தண்டனையிலிருந்து தப்பிக்க துருக்கியை விட்டு  தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்தகைய சூழ்நிலையிலும் தனது 105 குழந்தைகள் இலட்சியத்தை நிறைவேற்ற தனது கணவர் சிறையிலிருந்து திரும்பி  வரும் நாளை நம்பிக்கையுடன்  எதிர்பார்த்துக் காத்திருப்பதாக  கிறிஸ்ரினா கூறுகிறார்.