7 ராணுவ வீரர்களை கொன்று, பெண் சிப்பாயை கடத்தி சென்ற போகோ ஹரம் தீவிரவாதிகள்

245 0

புதியதாக பணியில் சேர்ந்த 7 ராணுவ வீரர்களை கொன்றுவிட்டு பெண் சிப்பாய் ஒருவரை போகோ ஹரம் தீவிரவாதிகள் கடத்தி சென்றனர்.

நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ராணுவ முகாமுக்கு அருகே, புதிதாக பணியில் சேர்ந்த 7 ராணுவ  வீரர்களை போகோ ஹரம் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். மேலும் பெண் சிப்பாய் ஒருவரையும் தீவிரவாதிகள் கடத்திச்  சென்றுள்ளனர். இந்த தாக்குதலில் 20 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மைதுகிரிக்கு கிழக்கே 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மாஃபா நகரில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் கடந்த வியாழனன்று, இந்த  கொடூர செயலில் ஈடுபட்டனர்.

நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் போகோ ஹரம் அமைப்பைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் தங்களது இயக்கத்தை அங்கே  நிறுவியுள்ளனர். அதே பகுதியில் நைஜீரிய ராணுவத்தின் தலைமையிடமும் உள்ளது. எனவே இருபடைகளுக்கும் இடையே  அடிக்கடி சண்டை, தாக்கதல் நடந்து வந்தது. கடந்த 7 வருடங்களாக இரு படைகளுக்கும் இடையே நடந்த தாக்குதல்களில் சுமார்  20,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், நைஜீரிய நகரம் மற்றும் காடுகளில் பதுங்கி இருந்த போகோ ஹரம் கிளர்ச்சி படையினரை கடந்த வருடம்  நைஜீரிய ராணுவம் விரட்டியடித்தது. எனினும் தொடர் தாக்குதல், குண்டுவெடிப்பு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் தொடர்ந்து  நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.