டீல் ரணில் – ராஜபக்ஷ அரசை விரட்டியடிப்போம்’ என்ற கோஷத்துடன் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்று (18) வியாழக்கிழமை கொழும்பு, லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டத்தின்மீது பொலிஸாரால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப்பிரயோகம் நடத்தப்பட்டதுடன் அனைத்துப்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட போராட்டக்காரர்கள் சிலர் பொலிஸாரால் துரத்திச்சென்று கைதுசெய்யப்பட்டனர்.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ‘டீல் ரணில் – ராஜபக்ஷ அரசை விரட்டியடிப்போம்’ என்ற கோஷத்துடன் இன்று (18) பிற்பகல் 2.30 மணியளவில் கொழும்பு, லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அண்மையில் நடாத்தப்பட்ட பாரிய எதிர்ப்புப்போராட்டத்தில் பெருமளவான பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ‘டீல் ரணில் – ராஜபக்ஷ அரசை விரட்டியடிப்போம்’, ‘நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை உடனடியாக இல்லாதொழியுங்கள்’, ‘மக்களின் பலத்தை உறுதிசெய்கின்ற புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை முன்னிறுத்திப் போராடுவோம்’, ‘மேலும் கடன்கள் வேண்டாம் – கொள்ளையடித்த நிதியைத் திருப்பித்தாருங்கள்’, ‘பொருட்களின் விலை – வரிச்சுமையைத் தாங்கமுடியவில்லை – வாழ்வதற்கு நிவாரணம் வழங்குங்கள்’, ‘அடக்குமுறைகளை நிறுத்துங்கள் – கைதுசெய்யப்பட்ட போராட்டக்காரர்கள் அனைவரையும் விடுதலை செய்யுங்கள்’, ‘மக்களின் வெற்றியை முன்னிறுத்தி மக்கள் கவுன்ஸிலை ஸ்தாபியுங்கள்’ என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
அதனைத்தொடர்ந்து லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அண்மையில் ஒன்றுகூடி, பேரணியாகச்சென்ற போராட்டக்காரர்கள் யூனியன் பிளேஸுக்கு அண்மையில் பொலிஸாரால் மறிக்கப்பட்டு, கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப்பிரயோகம் என்பன நடத்தப்பட்டதுடன் அதன்மூலம் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைக்கப்பட்டனர்.
இருப்பினும் அங்கிருந்து கலைந்து செல்லாமல் ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள் பலரை பொரளை சந்தி வரை துரத்திச்சென்ற பொலிஸார், அவர்களில் சிலரைக் கைதுசெய்தனர். பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டவர்களில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகேவும் ஒருவராவார்.

