ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் அத்து மீறியமை தொடர்பில், சி.ஐ.டி.யினரால் 15 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை, கொழும்பு நீதிவான் நீதிமன்றம், எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராவது மட்டும் போதுமானது என அறிவித்து விடுவித்தது.
களனி பகுதியில் மாடறுப்பை நிறுத்திய மேர்வின் சில்வாவுக்கு, பிணை அவசியமில்லை என இதன்போது திறந்த மன்றில் தெரிவித்த மேலதிக நீதிவான் கேமிந்த பெரேரா, இவ்வாறு அவரை விடுவித்தார்.
2007 டிசம்பர் 27 ஆம் திகதி ரூபவாஹினி கூட்டுத்தாபணத்துக்குள் அத்து மீறி நுழைந்தமை, சட்ட விரோத கூட்டம் ஒன்றின் உறுப்பினராக இருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் சி.ஐ.டி.யினர் அவரை இன்று ( 18) கைது செய்தனர்.
சி.ஐ.டி.யினர் இது குறித்து விசாரித்து, விசாரணை அறிக்கையை சட்ட மா அதிபருக்கு அனுப்பிய பின்னர் சட்ட மா அதிபர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய இக்கைது நடவடிக்கை இடம்பெற்றதாக மேர்வின் சில்வாவை மன்றில் ஆஜர் செய்து சி.ஐ.டி.யின் பிரதான பொலிஸ் பரிசோதகர் மாதவ குறிப்பிட்டார்.
இதன்போது முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா சார்பில் மன்றில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி பிரசாத் சில்வா, தனது சேவை பெறுநர் சம்பவ தினம் ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவரை சந்திக்க அங்கு சென்றதாகவும், இதன்போது அக்கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க தலைவர்கள் ஊழியர்களை குழப்பி தாக்குதல் நடாத்தியதாகவும் கூறினார்.
இதன்போது தனது சேவை பெறுநர் தன் மீது ஊழியர்கள் நடாத்திய தாக்குதல் குறித்து பொலிஸில் முறையிட்ட போதும் அது குறித்து இதுவரை நடவடிக்கைஎ டுக்கப்படவில்லை என மேர்வின் சில்வாவுக்காக அவரது சட்டத்தரணி நீதிமன்றில் குறிப்பிட்டார்.
அப்படி இருக்கையில், இச்சம்பவத்தில், தனது சேவை பெறுநர் நீதிமன்றை புறக்கணிக்கும் நபராக நடந்துகொள்ளவில்லை எனவும், இன்றும் (18) சுயமாகவே அவர் சி.ஐ.டி.யில் முன்னிலையானதாகவும் சட்டத்தரணி பிரசாத் சில்வா குறிப்பிட்டார். அதனால் எந்தவொரு நிபந்தன் அடிப்படையிலும் தனது சேவை பெறுநருக்கு பிணையளிக்குமாறு அவர் கோரினார்.
இதன்போது திறந்த மன்றில், மேலதிக நீதிவான் கேமிந்த பெரேரா, களனியில் மாடறுப்பை நிறுத்தியவருக்கு பிணை அவசியமில்லை என குறிப்பிட்டு, எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராவது மட்டும் போதுமானது என சுட்டிக்காட்டி மேர்வின் சில்வாவை விடுவித்தார்.

