மடுப் பிரதேச செயலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி எழுத்து மூலம் கோரிக்கை

402 0
மன்னார் மடுபிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம் பகுதியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்கள் வன இலாகாவால் கையகப்படுத்தப்பட்டிருந்த நிலையில், தமது நிலங்களுக்கான நில அளவை வரைபடங்களை வழங்குமாறு கோரி 71 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் மடுப் பிரதேச செயலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னார் மடுப்பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம் பகுதியில் 1965, 1996, 1970 மற்றும் 1971ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் உணவு விவசாயத்திட்டத்தின் கீழ் விவசாயச் செய்கைக்காக அப்பகுதி மக்களுக்கு காணிகள் வழங்கப்பட்டிருந்தன.
அக்காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் முன்னைய ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க காலப்பகுதியில் வழங்கப்படடிருந்தன.
யுத்த சூழ்நிலை காரணமாக இவ்விவசாய நிலங்கள் நீண்ட காலமாக கைவிடப்பட்டிருந்த நிலையில், அவை சிறிய பற்றைக்காடுகளாக மாறியுள்ளன.
யுத்தம் முடிவடைந்த பின்னர் மீள்குடியேறியுள்ள அப்பகுதி மக்கள் தமது சொந்த விவசாய நிலங்களை துப்பரவு செய்வதற்கு வனஇலாகாவால் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அக்காணிகளை தமது காணிகளென அடையாளப்படுத்தி சுமார் 200 ஏக்கர் காணியில் எல்லைக்கற்களை புதைத்திவிட்டு சென்றுள்ளனர்.
இதனால் அப்பகுதி மக்களின் விவசாய நிலங்கள் 200 ஏக்கர் பறிபோகும் நிலையில் உள்ளன.
இந் நிலையில் அம் மக்கள் தமது உறுதிக்காணிகளுக்கான நில அளவை வரைபடங்களையும், அது தொடர்பான விபரங்களையும் தருமாறு கோரி தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் விண்ணப்பங்களைப் பூர்த்திசெய்து மடுப் பிரதேசசெயலக நிர்வாக உத்தியோகத்தரிடம் கையளித்துள்ளனர்.
பிரதேசசெயலாளர் விடுமுறையில் உள்ளதால் அவ் விண்ணப்பங்களை பெற்றுக்கொண்ட நிர்வாக உத்தியோகத்தர் இது தொடர்பில் 14 நாட்களுக்குள் தெரியப்படுத்துவதாக மக்களிடம் வாக்குறுதியளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.