பாலி தீவில் நிலசரிவு – இரண்டு குழந்தைகள் உட்பட பன்னிரண்டு பேர் உயிரிழப்பு

397 0

இந்தோனேஷியாவின் பிரபலமான பாலி தீவில் இடம்பெற்ற நிலசரிவு காரணமாக இரண்டு குழந்தைகள் உட்பட பன்னிரண்டு பேர் உயிரிழந்தனர்.

ஒரே நேரத்தில் பல கிராமங்களில் நிலசரிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வழமைக்கு மாறாக ஏற்பட்ட மழையினை அடுத்து மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள மண் மென்மையானதன் காரணமாகவே மண்சரிவு ஏற்பட்டதாக இந்தோனேஷிய தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் பலர் புதையுண்டு இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்ட நிலையில், மீட்பு பணியாளர்கள் தொடர்ந்தும் இடிபாடுகளை அகற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று 145 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ள தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் சுட்டப்போ புர்வோ தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மேலும் அதிக அளவிலான மழை பெய்யும் பட்சத்தில் நில சரிவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.