ஆட்சி அமைப்பது தொடர்பான ஆளுநரின் அறிவிப்புக்காக காத்திருக்கும் நிலையில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைள் தமிழக அரசியல் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள மதுசூதனனை, அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அவைத்தலைவர் பொறுப்பில் இருந்து சசிகலா பதவி நீக்கம் செய்தார்.
அத்துடன், கட்சியின் புதிய அவைத் தலைவராக செங்கோட்டையனை சசிகலா நியமித்துள்ளார்.
கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கன்னியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் மதுசூதனனை பதவி நீக்கம் செய்வதாக சசிகலா அறிவித்துள்ளார்.
இதேவேளை, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தி கையெழுத்து பெற்றதாக சசிகலா உள்ளிட்டோர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன், காவல் ஆணையகத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளார்.
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை நேற்று சந்தித்த சசிகலா,
சட்டமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் அடங்கிய ஆவணத்தைக் கையளித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இது குறித்தே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் ஆணையாளர் ஜோர்ஜ், காவல்தறை இயக்குநர் ராஜேந்திரன், உளவுப்பிரிவு மேலதிக் ஆணையளார் தாமரைக்கண்ணன் ஆகியோர் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இதேவேளை, தமிழக முதலமைச்சராக சசிகலா பதவி ஏற்க தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

