உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நிதி உதவி

320 0

கத்தோலிக்க திருச்சபைத் தலைவர் திருத்தந்தை பிரான்சிஸ் ஆண்டகையினால் வழங்கப்படும் ஒரு  இலட்சம் யூரோ நிதி உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மற்றும் இலங்கைக்கான வத்திக்கான் தூதுவர் அதிவணக்கத்திற்குரிய பிறையன்  உடய்க்வே ஆண்டகை ஆகியோரின் தலைமையில்  கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தில்இன்றைய தினம் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதியன்று கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலம்,  நீர்கொழும்பு, கட்டுவப்பிட்டி, புனித செபஸ்தியார் ஆலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மற்றும் கொழும்பு நட்சத்திர ஹோட்டல்களில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் 270 இற்கும் மேற்பட்டவர்கள் பலியானதுடன், பலரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர். மேலும், பலர் சதா காலத்திற்கும் குணப்படுத்த முடியாத காயங்களுடன் உயிர் வாழ்ந்து வருகின்றனர்.

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிலிருந்து 50 இற்கும் அதிகமானோர்  கொண்ட குழுவொன்று திருத்தந்தை பிரான்சிஸ் ஆண்டகை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வத்திக்கானில் சந்தித்திருந்தது.

குறித்த குழுவினரை  சந்தித்து பேசிய திருத்தந்தை அவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியிருந்ததுன், கடவுளிடம் ஆழமான விசுவாசத்தை கொள்ள வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்திருந்தார்.

இந்த சந்திப்பை அடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் முகமாக ஒரு இலட்சம் யூரோவை திருத்தந்தை பிரான்சிஸ் ஆண்டகை  வழங்கியுள்ளார்.

இந்நிலையில்,  பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதி உதவி வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் கட்டுவப்பிட்டி புனித செபஸ்தியார் ஆலயத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றதுடன், இன்றைய தினம் கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தில் நடைபெறவுள்ளது.