சட்டத்தரணி ஒருவருக்கு மேல்நீதிமன்ற நீதிபதியாக உடனடி நியமனம்

355 0

அரசியலமைப்பு மற்றும் நீதிமன்ற சேவை சம்பிரதாயத்திற்கு புறம்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சட்டத்தரணி ஒருவருக்கு மேல்நீதிமன்ற நீதிபதியாக உடனடி நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் செயலாளர், கல்கிசை நீதிவான் எம்.எம்.எம்.மிஹால்லினால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றின் மூலம் இந்த தவறை திருத்திக்கொள்வதற்கான வழிகள் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 2017-02-03 ஆம் திகதி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் கூடிய நீதிமன்ற சேவைகள் சங்கத்தின் நிறைவேற்று சபையின் அவசர குழுக் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றிக் கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக ஜனாதிபதியிடம் கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் தனிப்பட்ட வகையில் சட்டத்தரணி தொழிலில் ஈடுபட்டுள்ள ராமநாதன் கந்தன் என்பவரை திடீரென மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பது அரசியலமைப்புக்கும், நீதிமன்ற சம்பிரதாயத்திற்கும் ஒவ்வாத செயற்பாடு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக பணியாற்றும் ராமநாதன் கந்தன் என்பவர் மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு 2017 பெப்ரவரி முதலாம் திகதி சத்தியப்பிரமாணம் மேற்கொள்ளவுள்ளதாக கடந்த 2017 ஜனவரி 31 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.

அரசியலமைப்பின் 111(02)(அ) சரத்துக்கு அமைவாக மேல் நீதிமன்ற நீதிபதியொருவர், சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறப்பட்ட பின்னர் நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழுவினால் வழங்கப்படும் பரிந்துரைக்கு அமைய ஜனாதிபதியினால் நியமிக்கப்படுவார் என அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும் நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழுவினால் அவ்வாறான பரிந்துரையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதா என அறிந்துகொள்வதற்காக கடந்த பெப்ரவரி முதலாம் திகதி நீதிமன்ற சங்கத்தின் அதிகாரிகள் சிலர் பிரதம நீதியரசரை சந்தித்ததாகவும், அதன்போது இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக கலந்துரையாடியதாகவும் நீதிமன்ற சேவைகள் சங்கம் தெரிவித்தது.

பின்விளைவாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் இவ்வாறான கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டதா என நீதிமன்ற சேவைகள் சங்கத்தினால் ஆராயப்பட்டது.

அதன்போது ராமநாதன் கந்தன் என்பவர் மேல்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எந்தவொரு கோரிக்கையையும் மேற்கொள்ளவி்ல்லை என சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் அமல் ரன்தெனியவினால் உறுதி செய்யப்பட்டதாக நீதிமன்ற சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.