தகவல் தொடர்பாடல் நிலையங்களின் சேவை கட்டணங்கள் அதிகரிப்பு

83 0

மின் கட்டணம் 75 சதவீதத்தினால் அதிகரித்துள்ளமையின் காரணமாக தகவல் தொடர்பாடல் நிலையங்களின் (கொம்யூனிகேஷன்) சேவை கட்டணங்களையும் அதிகரிக்கவுள்ளதாக அகில இலங்கை தொடர்பாடல் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திரஜித் பெரேரா தெரிவித்தார்.

கொழும்பில் புதன்கிழமை  (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

மின் கட்டணம் 75 சத வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் நிழற் பிரதிகள் மற்றும் அச்சு பிரதிகள் என்பவற்றிற்று அறவிடும் கட்டணங்களை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளோம். அதற்கமை இவற்றுக்கான கட்டணங்களை 5 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ஏ4 தாழ்களில் நிழற் பிரதிகளுக்கு 10 – 12 ரூபாய் அறவிடப்பட்டது. இந்த கட்டணத்தை 5 ரூபாவினால் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.

மின்சாரத்துறையிலுள்ள மாபியாக்களின் செயற்பாடுகள் காரணமாகவே இலங்கை மின்சாரசபை நஷ்டத்தில் இயங்குகிறது.

எனினும் அவற்றை தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமல் அந்த சுமையையும் மக்கள் மீது சுமத்துவதற்கான தீர்மானத்தையே தற்போது எடுத்துள்ளது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக பாதிக்கப்படும் மக்கள் கருப்பு கொடியேற்றி தமது எதிர்ப்பினை வெளியிட வேண்டும். பொது மக்கள் எமது தீர்மானத்தினால் பாதிக்கப்படுவர் என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். எனினும் எமக்கு இதனை விட மாற்று வழி கிடையாது என்றார்.