சசிகலாவுக்கு திருநாவுக்கரசர் ஆதரவு: மூத்த தலைவர்கள் கடும் எதிர்ப்பு

343 0

காங்கிரஸ் கட்சியின் ஆதரவை சசிகலா தரப்பினர் கேட்டதைத் தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிப்பதா அல்லது சசிகலாவை ஆதரிப்பதா என்பதில் காங்கிரஸ் தலைவர்களிடம் கருத்து வேறுபாடு உருவாகியுள்ளது.

சசிகலா முதல்-அமைச்சராக பதவி ஏற்ற பிறகு அவருக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காவிட்டால், காங்கிரசின் 8 எம்.எல்.ஏ.க் களும் அவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தை பாரதிய ஜனதா கட்சி மறைமுகமாக ஆதரிப்பதால், காங்கிரஸ் கட்சி சசிகலாவை ஆதரிக்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் கூறி வருகிறார்.

ஆனால் இதை ப.சிதம்பரம், இளங்கோவன், ராமசாமி உள்பட பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள் ஏற்கவில்லை. மூத்த தலைவரான ப.சிதம்பரம் தற்போதைய சூழ்நிலையில் யாருக்கும் ஆதரவு கொடுக்காமல் நடுநிலை வகிப்பதே நல்லது என்று கூறியுள்ளார்.

மேலும் சசிகலாவுக்கு ப.சிதம்பரம் மறைமுகமாக எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

முன்னாள் தலைவர் இளங்கோவன், தி.மு.க. எடுக்கும் முடிவை ஆதரிக்க வலியுறுத்தியுள்ளார். சசிகலாவுக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருப்பதால் தி.மு.க. கூட்டணிக்கு ஏற்ப காங்கிரசின் முடிவு அமைய வேண்டும் என்று இளங்கோவன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதே கருத்தைத்தான் வசந்தகுமார் எம்.எல்.ஏ.யும் வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் தற்போது எழுந்துள்ள அரசியல் சூழ்நிலை குறித்து 8 எம்.எல்.ஏ.க்களும் நேற்று கூடி விவாதித்தோம். எந்த முடிவு செய்தாலும் அதை 8 பேரும் ஒருமித்த குரலில் வெளியிட முடிவு செய்துள்ளோம்.

நீதிக்கும், நேர்மைக்கும் உரியவர்களுக்கே எங்கள் ஆதரவு கிடைக்கும். தற்போதைய நிலையில் தமிழக அரசியலில் எதுவும் நடக்கலாம். நாளைக்கே அ.தி.மு.க. பிரச்சினை சட்ட சபைக்கு வரலாம்.

அப்போது அ.தி.மு.க. வைத்தான் நாங்கள் ஆதரிக்க வேண்டும் என்ற எந்த நிலையும் இல்லை. தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி ஏற்படலாம். தி.மு.க. வுக்கு 89 பேர் உள்ளனர். காங்கிரசுக்கு 8 பேர் உள்ளனர்.

இந்த கூட்டணிக்கு மொத்தம் 97 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். இன்னும் 20 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே தேவை.

எனவே நிலையான ஆட்சி அமைய தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு மற்றவர்கள் ஆதரவு தரவேண்டும். இதை எல்லாரும் ஆய்வு செய்ய வேண்டும். அதற்கும் கூட வாய்ப்புள்ளது.

இவ்வாறு வசந்தகுமார் எம்.எல்.ஏ. கூறினார்.

காங்கிரஸ் மேலிடம் என்ன முடிவு எடுத்தாலும் கட்டுப்படுவோம் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூறினாலும் திருநாவுக்கரசரின் சசிகலா ஆதரவுக்கு மற்ற அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியில் திருநாவுக்கரசர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.