அணி மாறத் தயாராகும் 30 எம்.எல்.ஏ.க்கள்

246 0

அ.தி.மு.க.வில் தற்போது மொத்தம் 135 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

இவர்களில் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அணியில் 6 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். சசிகலா தரப்பில் தங்களிடம் 129 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாக சொல்கிறார்கள்.

சசிகலாவை ஆதரிக்கும் அந்த 129 எம்.எல்.ஏ.க்களில் 127 பேர் மகாபலிபுரம் அருகே கூவத்தூர் கிராமத்தில் இருக்கும் தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மூன்றாவது நாளாக அவர்கள் அங்கு இருக்கிறார்கள்.

இந்த நிலையில் சொகுசு விடுதியில் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையில் மாறுபட்ட தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. சுமார் 110 எம்.எல்.ஏ.க்கள்தான் அங்கு தங்க வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சசிகலா தரப்பினர் கட்டுப்பாட்டில் இருக்கும் 127 எம்.எல்.ஏ.க்களில் 22 பேர் முதல் 30 பேர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் என்று தெரிய வந்துள்ளது. அவர்கள் எந்த நேரத்திலும் ஓ.பன்னீர்செல்வம் அணி பக்கம் சாய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே அ.தி.மு.க.வில் மொத்தம் 30 தலித் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இந்த எம்.எல்.ஏ.க்களில் கணிசமானவர்களை பிரித்து ஓ.பன்னீர்செல்வம் பக்கம் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்கும் நத்தம் விசுவநாதன் இந்த முயற்சிகளில் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

கூவத்தூர் சொகுசு விடுதியில் வைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சுதந்திரமாக விடுவிக்கப்பட்டால் பலரும் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் ஓடி விடும் சூழ்நிலை உள்ளது. இது சசிகலா தரப்பை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

இதன் காரணமாக கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சசிகலா தரப்பினர் சந்தேகக் கண்களுடன் கண்காணித்து வருகிறார்கள். சில எம்.எல்.ஏ.க்கள் மீது அவர்களுக்கு சந்தேகம் வலுத்துள்ளது.

அத்தகைய எம்.எல்.ஏ.க்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 30 எம்.எல்.ஏ.க்கள் தாவும் பட்சத்தில் யாருமே ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலை உருவாகும்.

அத்தகைய சூழ்நிலை உருவாகாமல் தடுப்பதற்காக சசிகலா தரப்பினர் கடுமையாக போராடி வருகிறார்கள்.