காங்கிரஸ் ஆதரவைப் பெற சசிகலா அணி முயற்சி

255 0

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் தற்போது 5 பேர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்கிறார்கள்.

அடுத்த வாரம் சசிகலாவுக்கு எதிரான வழக்கில் தண்டனை வழங்கப்பட்டால் மேலும் சில அ.தி.மு.க. எம்.எல். ஏ.க்கள் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் சாய்வார்கள் என்று தெரிகிறது.

அத்தகைய சூழ்நிலை ஏற்பட்டால் சசிகலா தரப்பினர் ஆட்சி அமைக்க இயலாத அபாயம் ஏற்படும். அதைத் தவிர்க்க என்ன செய்யலாம் என்று சசிகலா ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.

அப்போது காங்கிரஸ் ஆதரவை கேட்டுப்பெறுவது என்று தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் ஆதரவை பெறும் தீவிர முயற்சிகளில் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 8 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு மேலும் 20 எம்.எல்.ஏ.க்கள் சென்று விட்டால் சசிகலா அணியில் வெறும் 110 எம்.எல்.ஏ.க்கள்தான் இருப்பார்கள்.

ஆட்சி நடத்த 117 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு வேண்டும். காங்கிரசின் 8 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவளித்தால் அ.தி.மு.க. பலம் 118 ஆக உயர்ந்து, ஆட்சியில் இருந்து தப்ப முடியும்.

எனவே காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவைப் பெற மேலிடத் தலைவர்களுடன் பேசப்பட்டது.

சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் நட்பு வட்டாரத்தில் உள்ளார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது நடராஜன் தலையிட்டதன் பேரில் ராகுல் வந்து சென்றார் என்று ஒரு தகவல் வெளியானது.

இந்த நிலையில்தான் காங்கிரசின் 8 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவைக் கேட்டு காங்கிரஸ் கதவு தட்டப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் அழைப்பு விடுத்தார்.

அதை ஏற்று ப.சிதம்பரம், இளங்கோவன், திருநாவுக்கரசர், ராமசாமி டெல்லி சென்றனர். அவர்களுடன் ராகுல் இன்று ஆலோசனை நடத்தினர்.

அதன் பிறகு இந்த விவகாரத்தில் காங்கிரசின் நிலைப்பாடு என்ன என்பது தெரிய வரும்