சசிகலா பதவி ஏற்க தடை கோரி மனு – அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

351 0

சசிகலா பதவி ஏற்க தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க இயலாது என்று நீதிபதிகள் தெரிவித்து கோரிக்கையை நிராகரித்து விட்டனர்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா முதல்-அமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார். ஓ.பன்னீர் செல்வமும் மெஜாரிட்டியை நிரூபிப்பேன் என்று அறிவித்துள்ளதால் கவர்னர் எடுக்கும் முடிவுதான் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். அவர் இன்னும் முடிவு எடுக்கவில்லை.

இதற்கிடையே சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கில் விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வெளிவர இருக்கிறது. அதுவரை அவர் பதவி ஏற்க தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பில் இன்று வக்கீல்கள் சுப்ரீம் கோர்ட்டை அணுகி, இந்த வழக்கை அவசரமாக கருதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

இதை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. அவசர வழக்காக விசாரிக்க இயலாது என்று நீதிபதிகள் தெரிவித்து கோரிக்கையை நிராகரித்து விட்டனர்.