ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2 மாதங்கள் கழித்து தமிழக அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டி இருக்கிறது.
சசிகலா தரப்பினர் தன்னை மிரட்டி ராஜினாமா கடிதம் வாங்கியதாக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி அளித்ததை தொடர்ந்து அ.தி.மு.க.வில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா, ஓ.பன்னீர்செல்வத்தின் பொருளாளர் பதவியை பறித்ததுடன் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தனக்கே இருப்பதாக கூறி கவர்னரையும் சந்தித்தார்.
முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் கவர்னரை சந்தித்தபோது தான் மிரட்டப்பட்டது பற்றியும், அரசியல் சூழ்நிலை குறித்தும் எடுத்துக் கூறியுள்ளார்.
எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழக அரசியல் களத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது.
தமிழக அரசியல் நிலவரம் பற்றி வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சூடான விவாதங்கள் பரவி வருகின்றன. ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக பல்வேறு கருத்துக்களும் குவிந்து வருகின்றன.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திரண்டது போல ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும் மெரினாவில் திரள்வதற்கு மாணவர்கள் புதிதாக திட்டம் தீட்டி இருப்பதாகவும், சமூக வலைதளங்களில் வேகமாக தகவல்கள் பரவி வருகின்றன.
வாட்ஸ்-அப் குழுக்கள் அனைத்திலும் கடந்த 2 நாட்களாக மின்னல் வேகத்தில் தமிழகம் முழுவதும் இந்த தகவல் பரப்பப்பட்டு உள்ளது. இதையடுத்து சென்னை மாநகர போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் திரண்ட மாணவர்களை அப்புறப்படுத்துவதற்குள் போலீசார் படாதபாடுபட்டனர். மாணவர்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட போராட்டம் கலவரத்தில் முடிந்தது. இதனை கருத்தில் கொண்டே மாணவர்கள் மீண்டும் மெரினாவில் கூடிவிடக்கூடாது என்பதில் போலீசார் மிகுந்த கவனமாக உள்ளனர்.
இதையடுத்து கலங்கரை விளக்கத்தில் இருந்து நேப்பியர் பாலம் வரையில் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சந்தேகத்துக்கிடமாக இளைஞர்கள் கூட்டமாக வந்தால் அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரிக்கிறார்கள். குறிப்பாக விவேகானந்தர் இல்லம் அருகில் கூடுதல் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது.

