உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போட அரசாங்கம் திட்டம் – லக்ஷ்மன் கிரியெல்ல

152 0

உள்ளூராட்சிமன்ற தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனால் உரிய காலத்தில் தேர்தலை அரசாங்கம் நடத்துமா என லக்ஷ்மன் கிரியெல்ல சபையில் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் 09 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டிருந்த அரசாங்கத்தின் கொள்கை உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மன்றங்களின் காலம் அடுத்த வருடம் மார்ச் மாதத்துடன் நிறைவடைகின்றன. அதன் பின்னர் தேர்தலை உரிய காலத்தில் அரசாங்கம் நடத்துமா என பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிடம் கேட்கின்றேன்.

ஏனெனில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை 2வருடங்களுக்கு பிற்படுத்துவதாக உள்ளூராட்சி மன்ற சபைகளின் தலைவர்களிடம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதனால் அரசாங்கம் உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதற்கு திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றது.

இதற்கு பதிலளித்த பிரதமர் தினேஷ் குணவர்த்தன, உள்ளூராட்சி மன்ற தேர்தல் உட்பட எதிர்வரும் காலங்களில் நடத்தப்படக்கூடிய தேர்தல்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் கட்சி தலைவர்களை அழைத்து தெளிவுபடுத்தியுள்ளது. என்றாலும் எந்த தேர்தலையும் பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கவில்லை. உள்ளூராட்சி மன்ற தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படும் என்றார்.

லக்ஷ்மன் கிரியெல்ல தொடர்ந்து தெரிவிக்கையில், நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண சர்வதேச நாணய நிதியத்திடம் கலந்துரையாடப்படுகின்ற போதிலும்  இதுவரை ஒரு டொலரைக்கூட பெற்றுக்கொள்ள அரசாங்கத்துக்கு முடியாமல் போயிருக்கின்றது.

வங்குராேத்து அடைந்துள்ள நாட்டுக்கு எந்த நாடும் நிதி உதவி வழங்குவதில்லை. அதனால் குறுகிய காலத்துக்குள் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுத்து, தேர்தலுக்கு சென்று புதிய அரசாங்கம் ஒன்றை அமைத்துக்கொள்ள மக்களுக்கு இடமளிக்கவேண்டும். புதிய அரசாங்கத்துக்கே சர்வதேச நாடுகள் உதவி வழங்குவதாக தெரிவித்திருக்கின்றன என்றார் .