ரணில் என்ன செய்யப்போகிறார் ?

252 0
  • வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு அரசியல் தீர்வை முன்வைக்க போவதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றமை குறித்து வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகள் மிகவும் அவதானத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றன. எனினும் ஜனாதிபதி முன் காணப்படுகின்ற சவால்களை எவ்வாறு சமாளிக்க போகிறார் ? எவ்வாறு முட்டுக்கட்டைகளை எதிர்கொள்ளப் போகிறார்? என்பதே இங்கு மிக முக்கியமானதாக இருக்கின்றது.
  • ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேசிய பிரச்சினைக்கு தீர்வு, பொருளாதார அபிவிருத்தி, நல்லிணக்க செயற்பாடுகள், வடக்கு கிழக்கு அபிவிருத்தி, புலம்பெயர் சமூகத்துடனான உறவு, சர்வதேச உறவு உள்ளிட்டபல்வேறு விடயங்கள் தொடர்பாக கடந்த காலங்களில் தான் கொண்டிருந்த நிலைப்பாடுகளை இம்முறை தனது பாராளுமன்ற உரையாக முன்வைத்திருக்கின்றார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் ஆற்றிய அரசாங்கத்தின் புதிய கொள்கை பிரகடன உரையானது பல்வேறு மட்டத்திலும் ஒரு ஆரோக்கியமான மதிப்பீட்டை பெற்றுக் கொண்டிருக்கிறது.  முக்கியமாக ஒரு யதார்த்தமான நாட்டுக்கு தேவையான சகல பிரச்சினைகளையும் ஆராய கூடிய வகையில் ஜனாதிபதியின் இந்த பேச்சு அமைந்திருப்பதாக சகல தரப்பினரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.  அதன்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் நிகழ்த்திய கொள்கை பிரகடன உரையில் பல முக்கிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

அதாவது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு  தீர்வுகாண சகலரும் ஒன்றிணையும் பட்சத்தில் எம்மால் நாட்டை கட்டியெழுப்ப முடியும். பிறிந்து சென்றால்  பாராளுமன்றத்தில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகள் மாத்திரமன்றி முழு நாட்டு மக்களும் துன்பத்திற்கும் அழிவிற்கும் ஆளாகுவர். எனவே சர்வகட்சி அரசாங்கம் ஒன்றினை அமைப்பதற்காக ஒன்றிணையுமாறு நான் மீண்டும் இந்த பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்துத் தரப்பினரிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்  என்று அறிவித்திருக்கிறார்.

மேலும் பல வருட காலமாக தமிழ் மக்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டியமை அத்தியாவசியமான காரணி யாகும்.  யுத்தத்தின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள்   சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் பலவற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தீர்க்க வேண்டிய காணிப் பிரச்சினைகள் பல உள்ளன. வடக்கின் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பாக நாம் புதிதாக சிந்திக்க வேண்டியுள்ளது. வெளிநாடுகளில் வாழ்கின்ற இலங்கை தமிழ் மக்களுடன் நெருங்கிச் செயற்பட்டு, இலங்கையியை  மீளக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்திற்கு அவர்களது ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொள்வதற்கும் நாம் எதிர்பார்க்கின்றோம் என்றும்  அவர் குறிப்பிட்டிருந்தார்.

எமது நாட்டின்  புவிசார் அமைவு மிகவும் முக்கியமானதாகும். நாம் இந்த இலாபகரமான அமைவின் உச்சப் பயனை பெற்றுக்கொள்ள வேண்டும். இதனை மனதில் நிறுத்திக்கொண்டு எமது எதிர்கால  நிறுவன சட்டங்கள் மற்றும் கொள்கைகளை வகுத்தல் வேண்டும். தினந்தோறும் கடன் பெற்றுக்கொள்வதன்மூலம் நாட்டை முன்கொண்டுச் செல்ல எம்மால் முடியாது. கடன் எடுப்பதை இயன்ற அளவு குறைத்துக்கொள்வதற்கு நாம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும். ஆகையினால் இந்து சமுத்திர கேந்திர புதிய பொருளாதார வலுவினால் எமது நாட்டுக்கு உச்சபட்ச பயனை பெற்றுக்கொள்ளக்கூடிய சட்டதிட்டங்கள் மற்றும் கொள்கைகளை  வகுக்கவேண்டும் என்றும்   ஜனாதிபதி கூறியிருந்தார்.

மேலும்  நாட்டின் பல்வேறு விடயங்கள் குறித்து ஜனாதிபதி பிரஸ்தாபித்திருந்தார்.  முக்கியமாக இந்திய அரசாங்கத்தின் உதவி,  எரிபொருள் நெருக்கடி , புதிய அரசியலமைப்பு உருவாக்கம், அரசியல் கட்சித் தலைவர்களை உள்ளடக்கிய தேசிய சபை, சுயாதீன மக்கள் சபை  உள்ளிட்ட விடயங்கள் குறித்தும்  ஜனாதிபதி பல்வேறு விளக்கமளிப்புக்களை முன்வைத்திருந்தார்.

அதன்படி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிகழ்த்திய உரையானது பல்வேறு முக்கிய விடயங்களை உள்ளடக்கியிருக்கின்றது. இது குறித்து  பல்வேறு தரப்பினரும் தமது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.  முக்கியமாக எதிர்க்கட்சித் தலைவர்  சஜித் பிரேமதாச ஜனாதிபதியின் உரையை ஒரு யதார்த்தமான உரை என்று குறிப்பிட்டு இருந்தார்.  அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதிநிதிகள், சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகள் கூட ஜனாதிபதியின் உரையை பாராட்டிருந்தனர்.

ஆனால் இவ்வாறு ஜனாதிபதியின் உரையை பாராட்டிய சகல தரப்பினரும் அந்த உரையில் இருக்கின்ற விடயங்களை நடைமுறையை படுத்துவது சவாலான விடயம் என்றும், உரையாற்றியதைப் போன்று அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டி இருக்கின்றனர். இது முக்கியமான தீர்க்கமான விடயமாக காணப்படுகின்றது.   குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தேசிய பிரச்சினைக்கு தீர்வு,  பொருளாதார அபிவிருத்தி, நல்லிணக்க செயற்பாடுகள்,  வடக்கு ,கிழக்கு அபிவிருத்தி,  புலம்பெயர் சமூகத்துடனான உறவு, சர்வதேச உறவு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கடந்த காலங்களில் தான் கொண்டிருந்த நிலைப்பாடுகளை இம்முறை தனது பாராளுமன்ற உரையாக முன் வைத்திருக்கின்றார்.

எனினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  கொள்கை பிரகடன உரையாக முன்வைத்துள்ள இந்த விடயங்களை நடைமுறைப்படுத்துவது என்பது அவ்வளவு சுலபமான விடயமாகவும் இலகுவான விடயமாகவும் அமைந்து விடாது என்பது சகலருக்கும் தெரியும். இவற்றை நடைமுறைப்படுத்துவதில் ரணில் விக்ரமசிங்க பாரிய சவால்களை எதிர்கொள்ளவேண்டி இருக்கும்.  அவற்றை தாண்டி இந்த பிரச்சினைகளை அவர் எவ்வாறு  தீர்க்கப் போகின்றார்?  எவ்வாறு இந்த மறுசீரமைப்புக்களை முன்னெடுக்க போகின்றார் ?  எவ்வாறு தேசிய பிரச்சினையை தீர்ப்பார்?  எவ்வாறு நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை எவ்வாறு முன்னெடுக்க போகின்றார் என்பதே  இங்கு மிக முக்கியமான விடயமாகும்.

குறிப்பாக நாட்டில் புரையோடிப் போயிருக்கின்ற தேசிய இன பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். அதற்கான ஒரு அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதி  அறிவித்திருக்கின்றார்.  ஆனால் அந்த அரசியல் தீர்வை காண்பது இலகுவானதல்ல.  அது பாரிய சவால் மிக்க விடயமாகவே  அமையும்.  இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்ததில் இருந்து கடந்த 70 வருட காலமாக இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு பல தலைவர்கள் முயற்சி எடுத்திருந்தாலும் கூட அவை வெற்றி பெறவில்லை.  காரணம் அந்த இனப்பிரச்சினை தீர்வுக்கான செயல்பாடுகள் மிகப்பெரிய தடைகளையும் நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்கொண்டதாகவே அமைந்திருக்கின்றது.

முக்கியமாக இன பிரச்சினைக்கு தீர்வு கண்டிருந்தால் இந்த நாட்டில் தற்போதைய நெருக்கடிகள்,  பிரச்சினைகள் வந்திருக்காது என்ற கருத்து முன்வைக்கப்படுகின்றது. இந்நிலையில் ஒரு அரசாங்கத்தின் தலைவர்  மற்றும் ஜனாதிபதி என்ற வகையில் வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஜனாதிபதி அறிவித்திருக்கின்றார்.  மிக முக்கியமான தீர்க்கமான ஒரு விடயமாக இது காணப்படுகின்றது. ஆரம்பத்தில் ரணில் விக்ரமசிங்கவின் தெரிவு  தொடர்பில் விமர்சனங்களையும் அதிருப்தியையும் தெரிவித்து வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட ஜனாதிபதியின் இந்த வடக்கு, கிழக்கு மக்களுக்கான அரசியல் தீர்வு என்ற விடயம் தொடர்பாக ஆரோக்கியமாக கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கின்றது. அந்த அடிப்படையிலேயே சர்வகட்சி செயற்பாட்டுக்கு ஆதரவு வழங்க தயார் என்று அறிவிப்பை  தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  பாராளுமன்றத்தால் பெரும்பான்மை பலத்துடன் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி என்ற வகையில் இந்த வட கிழக்கு மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பான விடயத்தை முன் வைத்திருக்கின்றார்.  இந்த விடயத்தில் அவர் எதிர்காலத்தில் எவ்வாறு   நடவடிக்கைகளை எடுப்பார் என்பதே தற்போது எதிர்பார்க்கப்படுகிறது.  முக்கியமாக வடக்கின் பிரதான அரசியல் கட்சிகளுடன் அவர் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.  கிழக்கின் பிரதான அரசியல் கட்சிகளுடன்  பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

அதனூடாக   எழுபது வருட காலங்களுக்கு பின்னர்  தேசிய பிரச்சினைக்கு ஒரு தீர்வை நோக்கி நகர முடியுமாயின்  அது மிகப்பெரிய ஒரு அடைவு மட்டமாக இலங்கையில் காணப்படும்.  இதற்கு சகல தரப்பினரும் தமது ஆதரவை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   எனவே அரசியல் ரீதியிலான செயல்பாடுகளை முன்னெடுத்து வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காண்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை  எடுப்பாராயின் அதற்கு சகல தரப்பினரும்   தமது பங்களிப்பை வழங்க வேண்டும்.   இந்நிலையில் ஜனாதிபதி இந்த செயற்பாடுகளை எவ்வாறு முன்னெடுக்க போகின்றார் ? எவ்வாறு இந்த சவால்களை சமாளிக்க போகிறார்?  தடைகளை எவ்வாறு தகர்த்தெறிய போகிறார்? என்பது இங்கு மிக முக்கியமான கேள்வியாக இருக்கின்றது.

அதேபோன்று பொருளாதார அபிவிருத்தி,  அரசியலமைப்பு உருவாக்கம்,  நல்லிணக்க செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் ஜனாதிபதி பல மறுசீரமைப்பு திட்டங்களையும்  அதற்கான ஆரம்ப அத்திவாரத்தையும்  தனது கொள்கை பிரகடன  உரை ஊடாக  வெளிப்படுத்தி இருக்கின்றார்.  ஆனால் அவற்றை எவ்வாறு அவர் செயல்படுத்தப்போகிறார்?  அவற்றுக்கான செயற்பாடுகளை எவ்வாறு முன்னெடுக்க போகின்றார் ? அதற்காக ஏனைய அரசியல் கட்சிகள் எவ்வாறு ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கப்போகின்றன ?   என்பன இங்கு மிக முக்கியமான விடயமாக காணப்படுகிறது.  இந்நிலையில் ஒரு சிறந்த உரையை மிக நீண்ட காலத்துக்கு பின்னர் நாட்டின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிகழ்த்தியிருக்கின்றார் .

ஆனால் நடைமுறையில் அவர் இந்த விடயத்தில் எவ்வாறான சவால்களையும் தடைகளையும் முட்டுக்கட்டைகளையும் எதிர்கொள்ளப் போகின்றார் என்பதும் அவற்றை எவ்வாறு அவர் தகர்த்தெறிய போகின்றார் என்பதும் இங்கு மிக முக்கியமானதாக இருக்கின்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த செயற்பாட்டை எவ்வாறு முன்னெடுக்க போகின்றார் என்பதை உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் சகல தரப்பினரும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அரசியல் மறுசீரமைப்புகளை  ஜனாதிபதி எவ்வாறு  செய்யப்போகிறார் என்பதை முழு உலகமும் பார்த்துக் கொண்டிருக்கின்றது.  முக்கியமாக வடக்கு, கிழக்கு  பிரச்சினைக்கு அரசியல் தீர்வை முன்வைக்க போவதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றமை குறித்து வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகள் மிகவும் அவதானத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றன.  ஜனாதிபதி ஆரோக்கியமான செயல்பாட்டை அணுகுமுறையை முன்னெடுத்தால்  நிச்சயமாக அதற்கு வடக்கு, கிழக்கு அரசியல் கட்சிகள் ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றன. எனினும் ஜனாதிபதி முன் காணப்படுகின்ற   சவால்களை  எவ்வாறு  சமாளிக்க போகிறார் ? எவ்வாறு முட்டுக்கட்டைகளை எதிர்கொள்ளப் போகிறார்?  என்பதே  இங்கு மிக முக்கியமானதாக இருக்கின்றது.  சகலம் இதனை உன்னிப்பாக அவதானித்துக்   கொண்டிருக்கின்றனர்.

ரொபட் அன்டனி