விகாரமகாதேவி பூங்காவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெருமளவானோர் பங்கேற்பு

206 0

‘ரணில் – ராஜபக்ஷ அரசாங்கத்தின் அடக்குமுறைகளை உடனடியாக முடிவிற்குக்கொண்டுவாருங்கள் : விரைவாகப் பாராளுமன்றத்தைக் கலையுங்கள்’ என வலியுறுத்தி இன்றைய தினம் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் ஆரம்பமான பேரணி பெருந்தொகையான மக்களின் பங்கேற்புடன் சுதந்திர சதுக்கத்தைச் சென்றடைந்ததுடன், அங்கு சர்வமதத்தலைவர்களின் முன்னிலையில் பிரதான 8 விடயங்களை உள்ளடக்கிய ‘மக்களாணை’ வெளியிடப்பட்டது.

அங்கு உரையாற்றிய ஓமல்பே சோபித தேரர், ‘இப்போது போராட்டகாரர்களுக்கு எதிராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பிரயோகிக்கப்படும் அடக்குமுறைகள் அவர் பொறுப்பேற்றுக்கொண்ட ‘கொந்தராத்தின்’ ஓரங்கமாக இருக்குமேயானால், கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஏற்பட்ட நிலையே அவருக்கும் ஏற்படும்’ என்று எச்சரித்தார்.

‘ரணில் – ராஜபக்ஷ அரசாங்கத்தின் அடக்குமுறைகளை உடனடியாக முடிவிற்குக்கொண்டுவாருங்கள் : விரைவாகப் பாராளுமன்றத்தைக் கலையுங்கள்’ என வலியுறுத்தி தொழிற்சங்கங்களைக் கூட்டிணைக்கும் மத்திய நிலையமும் ஒன்றிணைந்த மக்கள் இயக்கமும் நேற்று செவ்வாய்கிழமை நாடளாவிய ரீதியில் எதிர்ப்புப்போராட்டங்களையும் அரச விரோதப்பேரணிகளையும் ஏற்பாடு செய்திருந்தது.

சுமார் 4 மாதங்களுக்கு முன்னர் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைப் பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு, காலிமுகத்திடல் ‘கோட்டா கோ கம’ உள்ளடங்கலாக நாடளாவிய ரீதியில் மக்கள் முன்னெடுக்கப்பட்ட தன்னெழுச்சிப்போராட்டங்களின் விளைவாக அவர் பதவி விலகியதுடன் அதனைத்தொடர்ந்து பதில் ஜனாதிபதியாகப் பதவிவகித்த ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டார்.

இருப்பினும் அதன்பின்னர் காலிமுகத்திடல், ‘கோட்டா கோ கம’ போராட்டக்களம் மீதும் போராட்டக்காரர்களின் மீதும் நடாத்தப்பட்ட தாக்குதல்கள், அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டமை, போராட்டத்தை ஒழுங்குசெய்த முன்னரங்கப்போராட்டக்காரர்கள் மற்றும் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டமை, தடுத்துவைக்கப்பட்டமை உள்ளடங்கலாக அரசாங்கத்தினால் கையாளப்பட்டுவரும் வன்முறை வடிவிலான அடக்குமுறை உத்திகள் பல்வேறு தரப்பினரதும் கண்டனத்திற்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகியிருக்கின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் தாக்குதல்களுக்குள்ளான மற்றும் பாதிக்கப்பட்ட போராட்டக்காரர்களுக்குத் தமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையிலும் அரசாங்கம் அதன் அடக்குமுறை நடவடிக்கைகளை உடனடியாக முடிவிற்குக்கொண்டுவரும் அதேவேளை, பாராளுமன்றத்தையும் வெகுவிரைவில் கலைக்கவேண்டும் என்று வலியுறுத்தியும் தொழிற்சங்கங்களைக் கூட்டிணைக்கும் மத்திய நிலையமும் ஒன்றிணைந்த மக்கள் இயக்கமும் நேற்றைய தினம் எதிர்ப்புப்போராட்டங்களை ஏற்பாடு செய்திருந்தது.

அதன்படி கொழும்பில் விகாரமகாதேவி பூங்காவிற்கு அண்மையில் பி.ப 2.30 மணியளவில் திரண்ட மக்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகவும் அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பியவாறு நகர மண்டபம் (டவுன்ஹோல்) ஊடாக சுதந்திர சதுக்கத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர்.

இப்போராட்டத்தில் தொழிற்சங்கவாதிகள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், சர்வமதத்தலைவர்கள், இளைஞர்-யுவதிகள், வௌ;வேறு துறைசார்ந்தோர் மற்றும் சாதாரண பொதுமக்கள் உள்ளிட்ட பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது ‘ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அடக்குமுறைகளை உடனடியாக முடிவிற்குக்கொண்டுவாருங்கள்’, ‘கைதுசெய்யப்பட்ட போராட்டக்காரர்கள் விடுதலை செய்யப்படவேண்டும்’, ‘அரசே! மக்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்கு’, ‘பாராளுமன்றத்தை உடனடியாகக் கலையுங்கள்’ என்பன உள்ளடங்கலாக கடும் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துன்பத்தைப் பிரதிபலிக்கும் வகையிலும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டக்காரர்களால் கோஷங்கள் எழுப்பட்டதுடன் அதனையொத்த வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர்.

அதன்பின்னர் போராட்டக்காரர்கள் பேரணியாக சுதந்திர சதுக்கத்தை சென்றடைந்ததைத்தொடர்ந்து, அங்கு சர்வமதத்தலைவர்களின் முன்னிலையில் பிரதான 8 விடயங்களை உள்ளடக்கிய ‘மக்களாணை’ வெளியிடப்பட்டது.

ரணில் – ராஜபக்ஷ அரசாங்கத்தின் அடக்குமுறைகள் நிறுத்தப்படவேண்டும், கைதுசெய்யப்பட்ட போராட்டக்காரர்கள் விடுதலைசெய்யப்படவேண்டும், பயங்கரவாதத்தடைச்சட்டம் மற்றும் அவசரகாலநிலைப்பிரகடனம் உள்ளிட்ட மோசமான சட்டங்கள் நீக்கப்படவேண்டும், மக்களுக்கு நிவாரணத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஏற்றவாறான செயன்முறை தயாரிக்கப்படவேண்டும், மக்களின் சொத்துக்களை விற்பனை செய்வது நிறுத்தப்படவேண்டும், அரசியலமைப்பிற்கான 19 ஆவது திருத்தத்தில் உள்ள குறைபாடுகள் நீக்கப்பட்டு நிறைவேற்றதிகாரம் பாராளுமன்றத்திற்குப் பகிரப்படக்கூடியவகையில் புதிய அரசியலமைப்பொன்றைத் தயாரிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும், குறுகியகால அடிப்படையில் காபந்து அரசாங்கமொன்று ஸ்தாபிக்கப்படவேண்டும், வெகுவிரைவில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுப் பொதுத்தேர்தல் நடத்தப்படவேண்டும் என்ற 8 விடயங்களுமே சுதந்திர சதுக்கத்தில் வெளியிடப்பட்ட மக்களாணையில் உள்ளடங்கியுள்ளன.

அதனைத்தொடர்ந்து மகாநாயக்க தேரர்களின் சார்பில் அங்கு உரையாற்றிய தேரரொருவர்’ அத்தியாவசியத்தேவைகளைக்கூடப் பூர்த்திசெய்துகொள்ளமுடியாத மிகத்தீவிரமான நெருக்கடி நிலைக்கு மத்தியிலேயே மக்கள் போராட்டங்களில் ஈடுபடுகின்றார்கள்.

போராட்டங்களில் ஈடுபடுபவர்களை அடக்குவதன் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணமுடியாது. மாறாக பிரச்சினைகளுக்கான காரணத்தை ஆராய்ந்து, அதற்கு உரியவாறான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதன் மூலமே போராட்டங்களை முடிவிற்குக்கொண்டுவரமுடியும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஒருவிடயத்தைக் கூறவிரும்புகின்றோம். இப்போது போராட்டகாரர்களுக்கு எதிராக அவரால் பிரயோகிக்கப்படும் அடக்குமுறைகள் அவர் ஏற்றுக்கொண்ட ‘கொந்தராத்தின்’ ஓரங்கமாக இருந்தால், கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஏற்பட்ட நிலையே அவருக்கும் ஏற்படும் என்பதை நினைவுறுத்துகின்றோம்’ என்று எச்சரித்தார்.

இதுஇவ்வாறிருக்க தலைநகர் கொழும்பிற்கு அப்பால் அநுராதபுரம், தன்கொட்டுவவில, மாரவில, கலவான, வென்னப்புவ, புத்தளம், ஹோமாகம, கெக்கிராவை, தம்புள்ளை, மாத்தளை, பலாங்கொடை, நாவலப்பிட்டி, கேகாலை, செவனகல, பேராதனை, மதவாச்சி, ஹொரணை, மஹியங்கனை, கட்டுப்பெத்தை, பிலியந்தலை உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்றைய தினம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.