உயர்தர பரீட்சை நவம்பர் மாதம் திட்டமிட்ட வகையில் நடத்தப்படும் – கல்வி அமைச்சர்

135 0

2022ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் திட்டமிட்ட வகையில் நடத்தப்படும். 2021ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாதத்திற்குள் வெளியிடப்படும்.

எச்சவால்கள் தோற்றம் பெற்றாலும் வடக்கு மாகாணத்தில் கல்விக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றமை மகிழ்வுக்குரியது என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த சபையில் தெரிவித்தார்.

சபாநாயகர் தலைமையில் இன்று  செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கூட்டத்தொடரின் போது எதிர்க்கட்சி தலைவர் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட் பெருந்தொற்று தாக்கத்தின் காரணமாக கடந்த இரண்டரை வருடகாலமாக கல்வித்துறை பாதிக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

2020ஆம் ஆண்டு முதல் தேசிய பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன.அத்துடன் பாடத்திட்டங்களையும் முழுமைப்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளன.

இவ்வருடம் தேசிய பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நலன் கருதி விசேட கற்பித்தல் நடவடிக்கைகள் பாடசாலை மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் நாட்களில் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக பயிற்சி வழங்கப்பட்ட ஆசிரியர்களின் ஊடாக கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

2022ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பரீட்சை திட்டமிட்ட வகையில் நடத்தப்படும். 2021ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை பெறுபேற்றினை இம்மாத காலத்திற்குள் வெளியிட தீர்மானித்துள்ளோம்.

கொவிட் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை கல்வி நடவடிகைகள் தற்போது கட்டம் கட்டமாக சீர் செய்யப்படுகிறது.எரிபொருள் பற்றாக்குறைக்கு தற்போது தீர்வு எடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே இம்மாத காலத்திற்குள் பாடசாலை கல்வி நடவடிக்கைளை வழமைக்கு கொண்டு வர முடியும் என்பதை உறுதியாக குறிப்பிட்டுக்கொள்கிறேன்.

வடக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாடசாலை வருகை ஏனைய மாகாணங்களை காட்டிலும் அதிகளவில் காணப்படுகிறது.

வடக்கில் உள்ளவர்கள் யுத்த காலத்திலும் கல்விக்கு முன்னுரிமை வழங்கினார்கள். தற்போதும் அந்நிலைமை காணப்படுகின்றமை மகிழ்வுக்குரியது என்றார்.