5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

123 0

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

நேற்று (07) பிற்பகல் 3.00 மணி முதல் இன்று (08) பிற்பகல் 3.00 மணி வரையான காலப்பகுதியில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.

அதன்படி, அம்பாந்தோட்டை, மாத்தறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க நாவலப்பிட்டி பிரதேசத்திற்கு விஜயம் செய்த போதே அமைச்சர்  இதனை தெரிவித்தார்.

இதேவேளை, மண்சரிவு காரணமாக தடைப்பட்டிருந்த மலையக ரயில் பாதையின் ரயில் சேவைகள் நாளை (09) முதல் வழமைக்கு திரும்பும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மலையக ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையிலான பல ரயில் சேவைகள் அண்மையில் இரத்து செய்யப்பட்டன.