பொலிஸ் ஊரடங்கை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றில் மனு தாக்கல்

176 0

சட்ட நடைமுறைகளுக்கு அப்பால்,  பொலிஸ் மா அதிபரால் கடந்த ஜூலை 8 ஆம் திகதி  பொலிஸ் ஊரடங்கு  சட்டம் அமுல் செய்யப்பட்டதாக கூறியும் அதனால் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறு கோரியும்  உயர் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை இளம் ஊடகவியலாளர்களின் சங்கம்  சார்பில், அதன் இரு உறுப்பினர்களான தரிந்து  ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர  ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

சட்டத்தரணிகளான ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்,  ரம்ஸி பாச்சா உள்ளிட்ட குழுவினர் ஊடாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுவின் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

கடந்த 2022 ஜூலை 8 ஆம் திகதி  இரவு 9.00 மணி முதல் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு  சட்டம் அமுல் செய்யபப்டுவதாக   பிரதிவாதியான பொலிஸ் மா அதிபர் அறிக்கை ஊடாக அறிவித்ததாகவும், அதனால் பயணங்கள் அனைத்தையும் உடன் நிறுத்தி வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவிக்கப்பட்டதாகவும் மனுதாரர்கள் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மறு நாள் காலை  6.00 மணிக்கு பொலிஸ் ஊரடங்கு  நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டாலும், அவ்வாறான ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தமை சட்ட விரோதமானது எனவும் அடிப்படையற்றது எனவும்  குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த பொலிஸ் ஊரடங்கு உள் நோக்கம் கொண்ட அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த நடவடிக்கை என குறிப்பிட்டுள்ள மனுதாரர்கள் மறு நாள் அதாவது ஜூலை 9 ஆம் திகதி நடாத்தப்பட்ட  எதிர்ப்பு ஆர்ப்பட்டத்தை நீதிமன்ற உத்தரவு கொண்டு  தடுக்க முயன்று அது தோல்வியில் முடிவடைந்ததால் இவ்வாறு அடிப்படையற்ற பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதாக  சுட்டிக்காட்டியுள்ளனர்.

பொலிஸ் மா அதிபரின் குறித்த  ஊரடங்கு அறிவிப்பால்,  ரயில் சேவை உள்ளிட்ட பொது போக்குவரத்து முற்றாக முடங்கியதாகவும்  அதனால் பொது மக்கள் பாரிய அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்ததாகவும் மனுதாரர்கள் குறிப்பிட்டு இம்மனுவை தாக்கல் செய்துளனர்