கடற்படைக்கான தரவுகளை திரட்டுவதே சீனக்கப்பலின் நோக்கம் – கேர்ணல் ஹரிகரன் தெரிவிப்பு

173 0

இந்தியப் பெருங்கடலில் சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் பிரிவான கடற்படையின் நடவடிக்கைகளுக்கு தேவையான தரவுகளைச் சேகரிப்பதற்காகவே சீனாவின் யுவான் வாங்-5 கப்பல் இந்து சமுத்திரத்திற்குள் பிரவேசிக்கவுள்ளதாக கேர்ணல் ஆர்.ஹரிகரன்  தெரிவித்துள்ளார்.

சீனாவின் யுவான் வாங்-5 என்ற கப்பல் எதிர்வரும் 11ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்தினை வந்தடையவுள்ள நிலையில், அங்கு 17ஆம் திகதி வரையில் தரித்து நிற்கவுள்ளது.

இச்சமயத்தில், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் வடமேற்கு பகுதியில் சீனாவின் செயற்கைக்கோள்களின் கட்டுப்பாடு மற்றும் ஆராய்ச்சி கண்காணிப்பை நடத்தும்’ என்று இலங்கை;கான பாதை மற்றும் மண்டலம் முன்முயற்சி இணைதளம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், பாதுகாப்பு அமைச்சின் ஊடகப்பேச்சாளர் கேணல் நளின் ஹேரத், சீனாவின் கப்பல் அணுசக்கதி கப்பல் அல்ல, அது கண்காணிப்பு மற்றும் கடல்வழி அடையாளமிடல் ஆகிய பணிகளையே மேற்கொள்ளவுள்ளது. இவ்வாறு ஏனைய நாடுகளின் கப்பல்களுக்கும் அனுமதி வழங்கப்படுவது வழமை. அதனடிப்படையில் சீனாவின் கப்பலுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது’ என்று ‘த இந்து’ விற்கு தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சீனக்கப்பலின் அம்பாந்தோட்டை பிரவேசம் குறித்து இந்தியா தீவிரமான கரிசனை செலுத்தியுள்ளதாகவும், அப்பிரவேசத்தினை தடுத்து நிறுத்துமாறும் உயர்மட்ட வலியுறுத்தல்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் உள்ளன.

இந்நிலையில், இக்கப்பலின் வருகை தொடர்பில் இந்திய இராணுவத்தின் ஓய்வுநிலை  புலனாய்வு நிபுணரும் தெற்காசியாவில் பயங்கரவாதம் மற்றும் கிளர்ச்சிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் நீண்ட அனுபவம் வாய்ந்தவர்களுள் ஒருவருமான கேர்ணல் ஆர்.ஹரிகரனிடத்தில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் பிரிவான கடற்படையின் பலம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சீனா தனது ஆய்வுக் கப்பல்கள் மூலமாக இந்தியப் பெருங்கடலில் கடற்படை நடவடிக்கைகளுக்குத் தேவையான தரவுகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன,

கடந்த 2019 முதல் 2021ஆம் ஆண்டு ஜனவரி வரையில், இரண்டு சீன ஆய்வுக் கப்பல்கள் இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் தீவிரமாக செயற்பட்டிருந்தன. அந்தமான் ரூ நிக்கோபார் தீவுகளுக்கு தெற்கே உள்ள ஈஸ்ட் றிட்ஜைச் சுற்றியுள்ள ஒரு பெரிய பகுதியை ஆய்வு செய்தன. 2021 நவம்பரில், சீனா ஆப்பிரிக்கக் கடற்கரையிலும் வடக்கு அரபிக்கடலிலும் ஆய்வுகளை நடத்தியுள்ளது.

அதேநேரம் 2019இல் சீனா தனது ஆய்வுக் கப்பலான சியாங் யாங் ஹாங்-6 ஐப் பயன்படுத்தி இந்தியப் பெருங்கடலில் குறைந்தது 12 தடவைகள்  ட்ரோன்களை நிலைநிறுத்தி 12ஆயிரம் கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் பயணங்களைச் செய்து தகவல்களைப் பெற்றுள்ளது.

குறிப்பாக, கடலின் பாதைகளை வரைபடமாக்குதல், கடலின் உப்புத்தன்மை, கொந்தளிப்பு, ஒட்சிசன் அளவு, போன்ற தரவுகளை சேகரிக்கப்படுகின்றன. இத்தகைய தரவுகள் வெளிநாட்டு நீர்மூழ்கிக் கப்பல்களின் நகர்வுகளைக் கண்டறிந்து கண்காணிக்க உதவுவதுடன் தமது  சொந்த நீர்மூழ்கிக் கப்பல்களின் பாதுகாப்பான பயணங்களுக்கும் உதவுவதாக உள்ளன.

சீனக்கப்பலும் கண்காணிப்பும்

இவ்வாறான நிலையில் தான் தற்போது சீனாவின் நவீன வகை ஆய்வுக் கப்பலான யுவான் வாங்-5 அம்பாந்தோட்டையில் ஒரு வாரத்திற்குத் தங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அக்காலப்பகுதியில், அதைச்சுற்றியுள்ள கடலை ஆய்வு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் பின்னர் அக்கப்பல், மறைமுகமாக அரபிக்கடல், இந்தியாவின் மேற்குக் கடற்கரைகள் மற்றும் மாலைத்தீவுகள் மற்றும் இந்தியாவின் லாக்காடிவ் தீவுகளைச் சுற்றியுள்ள கடல்களில் ஆய்வுப் பணிகளைத் தொடரவுள்ளது. எனவே தான் இந்தியா தனது தேசிய பாதுகாப்பு தொடர்பில் கவலை கொண்டுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரையில், அமெரிக்காவிடமிருந்து பெறப்பட்ட அதிநவீன வான்வழிக் கண்காணிப்புத் திறனைக் கொண்டிருக்கின்றது. இந்தியக் கடற்படை இந்தியப் பெருங்கடலின் கடல்களை, குறிப்பாக மலாக்கா மற்றும் சுந்தா ஆகியவற்றின் மூலோபாய பகுதிகளை 24மணிநேரமும் கண்காணிப்பின் கீழ் வைத்திருக்கிறது.

சீனக் கப்பலாக இருந்தாலும் சரி அல்லது எந்தப் போர்க்கப்பலாக இருந்தாலும் சரி மலாக்கா மற்றும் சுந்தா ஜலசந்திக்கு ஊடாகவே இந்தியப் பெருங்கடலுக்குள் பிரவேசிக்க வேண்டும். எனவே சீனாவின் யுவான் வாங்-5 கப்பலாக இருக்கலாம் அல்லது போர்க்கப்பலாக இருக்கலாம் இந்துமா சமுத்திரத்தில் இந்தியாவின் கண்காணிப்பினைக் தவிர்த்து பிரவேசிக்க முடியாது என்றார்.

இலங்கையின் கவனம்

இந்நிலையில், ஐ.நா.வின் கடற்சட்டங்களின் பிரகாரம், சமுத்திரத்திரக் கடலில் போர்க்கப்பல்களுக்கு செல்வதற்கு எந்தத் தடையும் இல்லை. எவ்வாறாயினும், போர்க்கப்பல்கள் எந்த நாட்டின்  கடற்பகுதிக்குள்ளும் பிரவேசிப்பதற்கு  முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்.

எரிநிரப்புதல் மற்றும் பழுதுபார்ப்பதற்காக, போர்க் கப்பல்கள் எந்தவொரு நாட்டிற்குச் செல்வதாக இருந்தாலும் அந்த நாட்டினதும்,  பிராந்தியத்தினதும் அச்சத்தையும் தவிர்க்க  முன்கூட்டியே நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

குறிப்பாக, இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான அமைதியற்ற பாதுகாப்பு உறவுகளின் நிலையைக் கருத்தில் கொண்டு, இந்த விடயம் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்க வேண்டும். அதேநேரம், இந்தியாவின் அயல்நாடான இலங்கை, எந்தவொரு பாதுகாப்பு பிரச்சினையையும் சமாளிப்பதாக இருந்தால் இலங்கை, இந்தியாவை தனது தகவல் வளையத்தில் வைத்திருப்பது விவேகமான நடவடிக்கையாக இருக்கும்.

இதனைவிடவும், இந்தியா, இலங்கை மற்றும் மாலைத்தீவுகள் முக்கோண பாதுகாப்பு ஏற்பாட்டைக் கொண்டுள்ளன, ஆகவே அந்த உடன்படிக்கையை மீறாத வகையில் சீனக்கப்பலின் வருகையும் செயற்பாடுகளும் அமைய வேண்டும்.

அதேநேரம், பொருளாதார, அரசியல் நெருக்கடிகளுக்குள் சிக்கியிருக்கும் இலங்கை மட்டுமல்ல, இந்துசமுத்திரப் பிராந்தியில் உள்ள அனைத்து நாடுகளும் சீனா தொடர்பான பாதுகாப்பு விவகாரங்களைக் கையாள்வதில் கவனமாக இருக்க வேண்டும்.

இந்நிலையில் இலங்கையானது தனது பொருளாதார நெருக்கடியில் மீள்வதென்பது இந்தியா மற்றும் மேற்கு நாடுகளின் நல்லெண்ணத்திலேயே தங்கியுள்ளது. எனவே இந்தியாவின் கவலைகளை தவிர்ப்பதற்காக இலங்கை கூடுதலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதில் தவறில்லை என்றார்.