ஸ்திரமான அரசாங்கத்தை அமைக்க போராடிய தோழர் ஜோசப் ஸ்டாலின் கைது அரசாங்கத்தின் பலவீனத்தையே காட்டுகின்றது – இலங்கை அரசாங்க ஆசிரியர்களின் சங்கம் கண்டனம்

126 0

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் ஜோசப் ஸ்டாலின் நியாயத்திற்காக போராடிய ஒருவர் இவர் கைது செய்யப்பட்டுள்ளமை ஆட்சியில் உள்ள அரசாங்கத்தின் பலவீனத்தையே காட்டுகின்றது என தெரிவித்து இலங்கை அரசாங்க ஆசிரியர்களின் சங்கம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

இலங்கை அரசாங்க ஆசிரியர்களின் சங்கத்தின் பிரதான செயலாளர் செஹான் திஸாநாயக்க மற்றும் கிழக்கு மாகாண செயலாளர் கோபாலசிங்கம் சுஜிகரன் ஆகியோர் இணைந்து இன்று வெள்ளிக்கிழமை (05) வெளியிட்டுள்ள  அறிக்கையிலேயே இல்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் ஜோசப் ஸ்டாலின் அவர்கள் கடந்த 03.08.2022 அன்று கொழும்பு கோட்டை பொலிஸாரால் பிடியாணையின்றி கைது செய்யப்பட்டுள்ளமை ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் வேதனைக்குள்ளாக்கியுள்ள ஒரு சம்பவமாகும்.

மனித உரிமைப் பாதுகாவலர் ஒருவராக திகழ்பவரும் சமூகத்தின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் வாழ்ந்துவரும் அசைக்கமுடியாத தொழிற்சங்கவாதியும் ஆசிரியர் நலன்காக்க உடன் களமிறங்கும் ஆற்றல் மிக்கவருமான ஜோசப் ஸ்டாலின் அவர்கள் கைது செய்யப்பட்டமை குறித்து இலங்கை அரசாங்க ஆசிரியர்களின் சங்கம் கிழக்கு மாகாணம் சார்பாக வன்மையான கண்டனத்தை தெரிவிக்கின்றது.

உண்மையில் எமது இலங்கை அரசாங்க ஆசிரியர்களின் சங்கம் உட்பட தோழர் ஜோசப் ஸ்டாலின் அவர்களுடைய இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் ஏனைய ஆசிரியர் சங்கங்கள் இணைந்து கடந்த காலங்களில் ஆசியர்களுக்கான சுயஉரிமைகளைப் பெற பல போராட்டங்களை நடாத்தின. அந்த வகையிலேயே அண்மையில் முறையற்ற ஆட்சியை நடாத்திய அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் அனைவரும் ஒன்றுதிரண்டு நாட்டில் ஸ்திரமான அரசாங்கத்தினை கட்டியமைக்க போராடியிருந்தனர். அதில் தோழர் ஜோசப் ஸ்டாலின் அவர்கள் முனைப்பாக இருந்த ஒருவர். நியாயத்திற்காக போராடிய ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளமை ஆட்சியில் உள்ள அரசாங்கத்தின் பலவீனத்தையே காட்டுகின்றது.

சிங்கள தமிழ் தொழிலாளர்களிடையே ஒரு வலிமையான பாலமாக விளங்கிய இவர் இனங்களிடையே சமத்துவத்தை ஏற்படுத்தி வலிமை மிக்க நாட்டைக் கட்டியெழுப்ப விரும்பும் அனைவருக்கும் உறுதுணையாக இருந்த சமுகப் போரளியாவார். எனவே இவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

சுகங்களுடனும் அவர் இல்லம் திரும்ப வேண்டும். அவரது விடுதலைச் செய்தி கிடைக்கும் வரை இலங்கை அரசாங்க ஆசிரியர் சங்கம் தொடர்ந்தும் இந்த அரசாங்கத்திற்கு அழுத்தத்தினை ஏற்படுத்தும் என கிழக்கு மாகாண ஆசிரியர்கள் சார்பாக வலியுறுத்துகின்றோம். என அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.