தமிழக அரசின் இயலாமையே மின் கட்டண உயர்வுக்கு காரணம் – ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

218 0

மின் கட்டண உயர்வு மூலமாக, தமிழக அரசு தன்னுடைய இயலாமையை வெளிக்காட்டியுள்ளது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

மின் கட்டண உயர்வை கண்டித்து, தமாகா சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர், மாவட்ட தலைவர் எஸ்.ரவிக்குமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பேசியதாவது:

கடந்த 6 மாதங்களில் திமுக அரசு பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல், தொடர்ந்து மக்கள் எண்ணங்களை பிரதிபலிக்காமல் செயல்படுகிறது. சொத்து வரி, மின் கட்டண உயர்வு என 2 குண்டுகளை மக்கள் மீது போட்டுள்ளது திமுக அரசு. பல லட்சம் பேர் பயன்பெறும் திருப்பூர் மாவட்டத்தில், மின் கட்டண உயர்வு அனைத்து தரப்பையும் பாதிக்கும். தொழில்களும் நிச்சயம் பாதிக்கப்படும். மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை வதைத்துள்ளனர்.

‘ஆட்சி மாற்றம் வரும், மக்கள் வாழ்வில் ஏற்றம் வரும்’ என்று கூறி திமுக அரியணையில் ஏறியது. ஆனால், மக்கள் வாழ்வில் மாற்றம் வரவில்லை, ஏமாற்றமே அடைந்துள்ளனர். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. திருப்பூர், கோவை மாவட்டங்களில் தென்னை விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக உள்ள தேங்காய் விலை கடுமையாக சரிந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார். முன்னாள் எம்எல்ஏ விடியல் சேகர், மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது:

நிர்வாக சீர்கேடுதான் காரணம்

தமிழக அரசு மின் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தன்னுடைய இயலாமையை மறைக்க, மத்திய அரசு மற்றும் மின்வாரியம் என்று காரணம் கூறுவதை ஏற்க முடியாது.

மின் கட்டண உயர்வுக்கு காரணம் நிர்வாக சீர்கேடுதான். மின் பயன்பாடு அளவீடு முறையை மாதந்தோறும் கொண்டுவர வேண்டும். கடந்த ஆட்சியில் மின்மிகை மாநிலமாக இருந்தது. ஆனால் இன்றைக்கு மின்வெட்டு மாநிலமாக உள்ளது. சொத்து வரி, மின் கட்டணம் உயர்வு என மாடல் ஆட்சி மாறியுள்ளது. காமராஜர் ஆட்சியில் குறைந்த வருவாயில் அதிக திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.