2,973 ஐஸ் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது

184 0

கொழும்பு மத்திய தபால் நிலையத்தில் இன்று இரண்டு கோடி தொண்ணூற்று ஏழு இலட்சத்து முப்பதாயிரம் ரூபா பெறுமதியான மெத்தம்பட்டமைன் அல்லது ஐஸ் எனப்படும் போதைப்பொருளுடன், சந்தேகநபர் ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர், தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த பொதி நெதர்லாந்தில் இருந்து கம்பஹா கணேமுல்லவில் உள்ள கால் மசாஜ் செய்பவருக்கு என பெயரிடப்பட்ட முகவரிக்கு கொழும்பு மத்திய தபால் நிலையத்திற்கு விமான அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் சுங்க அதிகாரிகள் குறித்த பொதியிலிருந்த இயந்திரத்தை பரிசோதித்த போது 01 கிலோ 189 கிராம் எடை கொண்ட 2,973 மெத்தம்பெட்டமைன் போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த பொதியை பெற்றுக் கொள்வதற்காக பொதியில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் உள்ள நபரும் கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனைக்கு வந்திருந்த நிலையில், அவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனையின் தபால் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளும் இந்த கைது நடவடிக்கைக்கு உதவினர்.

தற்போது போதை மாத்திரைகள் கையிருப்பு மற்றும் அவற்றை எடுத்துச் செல்ல வந்த நபர், மேலதிக விசாரணைக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.