நாட்டில் தற்போது நிலவும் மருந்துகளுக்கான தட்டுப்பாடு ஆகஸ்ட் மாதத்தில் நிறைவுக்கு வரும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அத்தோடு தற்போது பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் ஓரளவிற்கு தீர்க்கப்பட்டு நாடு வழமைக்கு திரும்பிக் கொண்டிருப்பதாகவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மினுகோஷி ஹிதேகி மற்றும் யுனிசெஃப் அமைப்பின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் கெஹெலிய மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஜப்பான் அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 1.5 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்து பொருட்களின் முதற்கட்ட தொகை நேற்று வியாழக்கிழமை ஜப்பான் தூதுவரால் சுகாதார அமைச்சரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
இவ்வாறு கையளிக்கப்பட்டவற்றில் உயர் இரத்த அழுத்தம் , நீரிழிவு நோய், இதய நோய், சிறுநீரக நோய், கல்லீரல் நோய் உள்ளிட்டவற்றுக்காக வழங்கப்படும் மருந்துகள் உள்ளடங்குகின்றன.
குறிப்பாக கர்பிணிகளுக்கான நீரிழிவு மற்றும் கல்சியம் என்பவையும் காணப்படுகின்றன. நேற்றை தினம் கையளிக்கப்பட்ட முதற்கட்ட மருந்து தொகையின் பெறுமதி 107 650 டொலர்களாகும்.
இவை யுனிசெப் அமைப்பின் ஊடாக ஜப்பான் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான உப பிரதிநிதி எம்மா பிரிங்கம் மற்றும் ஜப்பான் பிரதிநிதிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
உலகெங்கிலும் உள்ள அனைத்து நட்பு நாடுகளும் இலங்கை நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஆதரவளித்து வருகின்றன. அந்த நாடுகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் மிகவும் நட்பு ரீதியில் ஆதரவை வழங்கியுள்ளதாகவும் அவற்றுள் ஜப்பான் உயர்தர நட்புறவை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குறிப்பாக கொவிட் நெருக்கடி காலத்திலும் தற்போதைய நெருக்கடி நிலையிலும் வழங்கப்படும் ஆதரவு மிகவும் முக்கியமானது என்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்று வரும் கலந்துரையாடல்கள் வெற்றிகரமானவை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த வாரத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை கனிசமானளவு அதிகரித்துள்ளதாகவும், அதற்கமைய எதிர்காலத்தில் அனைத்தும் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்த சவால்களை எதிர்கொண்டு தனித்துவமான வெற்றியை அடைய முடியும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மருந்து நெருக்கடியின் போது, சுகாதாரத் துறையின் நிபுணர்களின் ஆலோசனையின்படி, கொடுக்கப்பட வேண்டிய முன்னுரிமைகள் வகைப்படுத்தப்பட்டு சரியான முறையில் கையாளப்பட்டன.
குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு முன்னுரிமை அளித்து , அவசர சிகிச்சைகள் மற்றும் உபகரணங்களை சுயமாக நிர்வகித்து, அவசரமற்ற அறுவை சிகிச்சைகளுக்கு வேறு திகதியை வழங்கி சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்யப்பட்டமை முக்கியமானது என சுகாதார அமைச்சர் வெளிநாட்டுப் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டினார். அத்தோடு நாட்டில் திரிபோஷா திட்டத்தை மீண்டும் தொடங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

