கொழும்பு – 3, 5 ஆம் ஒழுங்கை, இலக்கம் 119 இல் அமைந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டின் மீது தீ வைத்து அவரது கார் உள்ளிட்ட சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில், ;கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நான்கு சந்தேக நபர்களின் விளக்கமறியல் காலமும் எதிர்வரும் ஆகஸ்ட் 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கோட்டை நீதிவான் திலின கமகே இன்று பிறப்பித்தார்.
இந் நிலையில் 8 ஆவது நிறைவேற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, பிரதமராக இருக்கையில் அவரது இல்லத்துக்கு தீ வைத்தமை ( கடந்த 9 ஆம் திகதி) தொடர்பில் விசாரணைக்கு மிக அவசியமான பிரதான சந்தேக நபர் ஒருவர் நாட்டைவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக சி.ஐ.டி.யினர் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இவோன் பெரேரா எனும் குறித்த நபரை 5 ஆவது சந்தேக நபராக பெயரிடுவதாக சி.ஐ.டி.யினர் இன்று ( 27) நீதிமன்றுக்கு அறிவித்தனர்.
இன்றையதினம் இந்த விவகாரம் குறித்த அவ்ழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையாளர்களான சி.ஐ.டி.யினர் சார்பில் உதவி பொலிஸ் அத்தியட்சர் சானக சில்வாவுடன் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜயந்த பயாகல பொலிஸ் பரிசோதகர் சம்பத், ; உப பொலிஸ் பரிசோதகர்களான ; லக்சிறி மற்றும் விஜேசிங்க ஆகியோர் மன்றில் ஆஜராகினர்.
சந்தேக நபர்களுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி நளின் இந்ரதிஸ்ஸ, சிரேஷ்ட சட்டத்தரணி கிங்ஸ்லி ஹெட்டி ஆரச்சி உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாம் ஆஜரானது.
;ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உரிமைகள் தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நிசங்க நாண்யக்கார தலைமையில் சிரேஷ்ட சட்டத்தரணிகளான பிஸ்பாஹ் சத்தார், அஜித் பத்திரன உள்ளிட்ட குழுவினர் ஆஜராகினர்.
விசாரணைகள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு இருப்பதாலும் சந்தேக நபர்களுக்கு பிணையளிக்க வேண்டாம் என சி.ஐ.டி.யினர் நீதிமன்றை இதன்போது கோரினர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அரசாங்கம் வழங்கிய உத்தியோகபூர்வ வாகனத்துக்கு மேலதிகமாக, ; அமைச்சரவை பாதுகாப்பு பிரிவுக்கு சொந்தமான வாகனம் ஒன்றும், ; மிரிஹானை பொலிஸ் வலயத்துக்கு சொந்தமான வாகனம் ஒன்றும் மாத்தறை பொலிஸ் வலய வாகனம் ஒன்றும், ; தீயணைப்பு வாகனம் ஒன்றும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக இதன்போது சி.ஐ.டி.யினர் மன்றுக்கு தெரிவித்தனர்,
எனினும் சந்தேக நபர்களுக்காக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நளின் இந்ரதிஸ்ஸ, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியது இந்த சந்தேக நபர்கள் தான் என பொலிஸ் சாட்சிப் பதிவுகளில் எங்கும் இல்லை என குறிப்பிட்டார். அத்துடன் இது தொடர்பில் பதியப்பட்டுள்ள மூன்று பொலிஸாரின் சாட்சியங்கள் ஒரு சொல் கூட பிசகாது ஒரே மாதிரியாக இருப்பதை சுட்டிக்கடடிய அவர்,இவை புனையப்பட்ட வாக்கு மூலம் என குறிப்பிட்டு பிணை கோரினார்.எனினும் இதற்கு ; எதிர்ப்பு வெளியிட்ட சி.ஐ.டி. அதிகாரிகள், விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் பிணையளிக்க வேண்டாம் என கோரினர்.
‘ கனம் நீதிவான் அவர்களே, விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இந்த நான்கு சந்தேக நபர்களினதும் கைவிரல் ரேகை பதிவுகளை பெற்று, எரிக்கப்பட்ட காரில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட ; ரேகைகளுடன் ஒப்பீடு செய்ய வேண்டும். அத்துடன் சந்தேக நபர்களின் தொலைபேசிகள் பகுப்பாய்வு செய்யப்படல் வேண்டும். அதற்காக அவர்களது தொலைபேசி கடவுச் சொற்கள் அவசியமாகிறது. அத்துடன் சி.ஐ.டி.ரி.வி. மற்றும் ஊடக காணொளிகள் தற்போதும் பகுப்பாய்வு செய்யபப்டுகின்றன.
அந்த நடவடிக்கைகள் நிறைவுறும் வரை, இந்த நான்கு பேரும் பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழ், ஜனாதிபதியின் காருக்கு தீ வைத்தமை தொடர்பில் தொடர்புபட்டனரா இல்லையா என கூற முடியாது. ஏனெனில் அவர்கள் குற்றம் நடந்த பகுதியில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளனர்.’ என தெரிவித்தனர்.
விடயங்களை ஆராய்ந்த நீதிவான் திலின கமகே, சந்தேக நபர்களின் பிணை கோரிக்கையை நிராகரித்து அவர்களை ; எதிர்வரும் 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

