கேப்பாப்பிலவு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு மக்கள் போராட்டம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் முக்கிய சந்திப்பு(காணொளி)

277 0

படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கடந்த 9 தினங்களாக முல்லைத்தீவு கேப்பாப்பிலவு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு மக்கள் போராட்டம் நடாத்திவரும் நிலையில், இவ்விடயம் தொடர்பாக இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் முக்கிய சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனின் தலைமையில் இச்சந்திப்பு நடைபெறவுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்துகொள்வதற்காக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஐந்து பேர் கொழும்புக்கு பயணமாகியுள்ளனர்.

எனினும் தமது பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்கும்வரை சத்தியாக்கிர போராட்டம் தொடருமென கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பெற்றோருடன் போராட்ட பகுதியிலிருக்கும் அவர்களின் பிள்ளைகளும் பாடசாலை செல்ல முடியாத நிலைமை தொடர்ந்தும் நீடிக்கும் நிலையில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் கரைதுரைபற்று பிரதேச செயலாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்தனர்.

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெற்றோரை மாவட்ட அரச அதிபரும் பிரதேச செயலாளரும் கேட்டுக்கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை புதுக்குடியிருப்பிலும் 6ஆவது நாளாக சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.