ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று இடம்பெறும் ஆளும் கட்சி கூட்டத்தில் கலந்துக்கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை புறக்கணித்துள்ளோம்.
நாங்கள் ஆளும் தரப்பு அல்ல எதிர்தரப்பினராவோம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் கிடையாது என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளை ஒன்றினைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவதானம் செலுத்தியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மக்களாணை கிடையாது ஆகவே ஸ்தாபிக்கப்படும் அரசாங்கம் எவ்வளவு நாட்கள் நீடிக்கும் என குறிப்பிட முடியாது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தலைமையில் இன்று மாலை நிதியமைச்சில் இடம்பெறும் ஆளும் தரப்பு குழு கூட்டத்தில் கலந்துக்கொள்ளுமாறு எமக்கு அதாவது பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆளும் தரப்பு குழு கூட்டத்தில் கலந்துக்கொள்ள போவதில்லை.ஏனெனில் நாங்கள் ஆளும் தரப்பு அல்ல பாராளுமன்றில் எதிர்க்கட்சியாக செயற்படுகிறோம்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ,பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பதவி விலக வேண்டும் என்பதை ஆரம்பத்தில் தெரிவித்தோம்.
ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியில் .இருந்து விலக வேண்டும் என குறிப்பிட்ட நாங்கள் அவர் ஜனாதிபதியாக பதவியேற்றதை தொடர்ந்து அவருடன் ஒன்றிணைய போவதில்லை.
என்பதை உறுதியாக குறிப்பிட்டுக்கொள்ள வேண்டும்.நாட்டு நலனுக்காக முன்னெடுக்கும் தீர்மானங்களுக்கு ஆதரவு வழங்குவோம்.
பாராளுமன்றில் உள்ள சகல எதிர்தரப்பினரையும் ஒன்றினைத்து பலமான கூட்டணியை ஸ்தாபிக்க எதிர்பார்த்துள்ளோம்.
நாட்டு மக்கள் தேர்தலை கோருகிறார்கள்.தமக்கான அரசாங்கத்தை தெரிவு செய்ய மக்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றார்.

