யாழில் சட்டவிரோத மணல் கடத்தல்காரர்களால் அதிகரித்துள்ள வாகன விபத்துக்கள்

122 0

சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற வாகனம் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மற்றும் தனியார் பேருந்து ஆகியவற்றுடன் விபத்தினை ஏற்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் மந்திகை பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

சட்டவிரோதமான முறையில் மணலை ஏற்றி மிக வேகமாக சென்ற கன்ரர் ரக வாகனம் வேக கட்டுப்பாட்டினை இழந்து டீசல் பெற காத்திருந்த தனியார் பேருந்தின் மீது மோதி விபத்தினை ஏற்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்று , பருத்தித்துறையில் இருந்து கொக்கிளாய் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துடனும் மோதி விபத்தினை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளது.

இந்த சம்பவத்தில் , எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

குறித்த விபத்து சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை கடந்த வாரம் சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த டிப்பர் ரக வாகனம் நெல்லியடி மாலை சந்தை பிள்ளையார் கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் மத்தியில் புகுந்து விபத்தினை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்றது. அதில் 7 பேர் காயமடைந்திருந்தனர்.

சட்டவிரோத மணல் கடத்தல் காரர்களினால் வடமராட்சி பகுதிகளில் விபத்து சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.